நமது நிருபர்
ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை தங்கள் படை தாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அணுசக்தி அச்சுறுத்தலை காரணம் காட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி போரை துவக்கின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் தன் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் நடன்ஸ் அணு ஆயுத செறிவூட்டும் நிலையம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அந்த இடத்திலிருந்து கதிர்வீச்சுக் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
நடன்ஸ் அணுசக்தி நிலையம், டெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீ தொலைவில் உள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் மையமாகும். இது நிலத்தடியில் 40-50 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, இது ஈரானின் முதன்மை செறிவூட்டல் தளமாகச் செயல்படுகிறது.
ஈரானின் முதன்மை யுரேனியம் செறிவூட்டும் மையமான நடன்ஸ், போரின் ஆரம்பத்திலேயே குறிவைக்கப்பட்டிருந்தது. தற்போது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அதன் பல கட்டடங்கள் சேதமடைந்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
ஈரானில் தனது ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா தனது இருப்பை வலுப்படுத்தும் விதமாக, கூடுதலாக மூன்று நீர்நிலத் தாக்குதல் கப்பல்களையும் 2,500 கடற்படை வீரர்களையும் அங்கு நிலைநிறுத்தியுள்ளது.
அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுவதால், இந்த மோதல் மேலும் ஆபத்தான நிலைநோக்கி செல்கிறது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
