புதுடில்லி: தடையில்லா கப்பல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேலுடனான போர் 22ம் நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக அவர் விடுத்த எக்ஸ் தளப்பதிவில்; ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானுடன் உரையாடினேன். அப்போது, ரம்ஜான் மற்றும் வசந்த கால துவக்கத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். இந்தப் பண்டிகை காலம், மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என்று இருநாட்டு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தோம்.
ஈரானின் முக்கியக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது போன்ற தாக்குதல்களால், பிராந்திய நிலைத்தன்மையை சீர்குலைப்பதோடு, உலகளாவிய விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பான மற்றும் தடையில்லாத கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்தினேன். ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் போரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரு நாட்டுத் தலைவர்களின் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
