இங்கிலாந்தின் ஷெஃபீல்டு (Sheffield) நகரில் வசிக்கும் லூயிசா (34) மற்றும் அவரது கணவர் டான் தம்பதியினர், தங்களது 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வீட்டின் தரைத்தளத்தில் செங்கற்களால் மூடி மறைக்கப்பட்டிருந்த ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடித்துள்ளனர். அதற்குள் நிலக்கரி குவியலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்காலப் பணக்கட்டுகளைக் கண்டு அவர்கள் பெரும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
1.3 கோடி ஆண்டுகள் ஓல்ட்: 245 கி.மீ நீளம்… பூமிக்கு அடியில் உப்பால் உருவான 9 மாடி உலகம்
செங்கல் சுவருக்குப் பின்னால் மறைந்திருந்த ரகசிய அறை
2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்த இந்த தம்பதியினர், தங்களது நிலவறைக்குச் செல்லும் படிகளுக்குக் கீழே செங்கற்களால் அடைக்கப்பட்டிருந்த ஒரு சுவரைக் கவனித்துள்ளனர். ஆர்வ மிகுதியால் அந்தச் சுவரை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே நிலக்கரிகள் நிரப்பப்பட்ட ஒரு ரகசிய அறை இருப்பது தெரியவந்தது. நிலக்கரியைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும்போது, அதற்கடியில் மிகவும் பழைய வண்ணம் பூசும் டின் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதை டான் கண்டுபிடித்தார்.
துருப்பிடித்த டினுக்குள் காத்திருந்த ஆச்சரியம்
அந்த டின்னில் இருந்து அம்மோனியா நெடி அடித்ததால், அதைத் திறக்கப் பயந்து பல மாதங்கள் ஒரு பக்கமாகவே ஒதுக்கி வைத்திருந்தோம் என்று லூயிசா தெரிவித்துள்ளார். பல மாதங்களுக்குப் பிறகு, தங்களது குழந்தைகளுடன் சேர்ந்து அந்தத் துருப்பிடித்த டின்னைத் திறக்க முடிவு செய்தனர். கைகளால் தொடாமல் கருவிகளைப் பயன்படுத்தி அந்த டினைத் திறந்தபோது, உள்ளே காகிதங்களால் சுற்றப்பட்ட கட்டுகள் இருந்தன.
அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது, அவை 1970-ஆம் கால கட்டத்தைச் சேர்ந்த பழைய 5 பவுண்ட் (£5) நோட்டுகள் என்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1,000 பவுண்டுகளுக்கும் அதிகமான, இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,00,000-க்கும் அதிகமான பணம் இருந்தது. அந்தப் பழைய பணத் தாள்களைப் பத்திரமாக உலர்த்திய பிறகு வங்கியில் கொடுத்து மாற்றிக்கொண்டனர்.
கொரோனா காலத்தில் தற்காலிகமாக வேலை இன்றித் தவித்த லூயிசா குடும்பத்திற்கு, இந்த எதிர்பாராத பண வரவு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. நிலுவையில் இருந்த மின்கட்டணம் போன்ற பல கட்டணங்களைச் செலுத்தவும், குழந்தைகளுக்குச் சில உதவிகளைச் செய்யவும் இந்தப் பணம் பெரிதும் பயன்பட்டது.
இங்கிலாந்து வீடுகளில் இது சாதாரணமா?
இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் 1919-ஆம் ஆண்டிற்கு முன்பே கட்டப்பட்டவை. எனவே, இதுபோன்று 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வீடுகளில் ரகசிய அறைகள், பூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் மற்றும் எதிர்பாராத பழங்காலப் பொருட்கள் கிடைப்பது அங்கிருக்கும் மக்களுக்குத் தொடர்ச்சியான ஆச்சரியமான அனுபவமாகவே இருந்து வருகிறது.
