கரூர் இனாம் நிலங்கள் விவகாரம்: அமைச்சர் ரமேஷ் ராஜினாமா செய்ய ராம ரவிக்குமார் வலியுறுத்தல்

கரூர் மாவட்ட இனாம் நிலங்கள் விவகாரத்தில், நீதிமன்ற விசாரணையில் உள்ள சூழலில் தனிநபர் உரிமையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் உடனடியாகத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கரூர் மாவட்ட இனாம் நிலங்கள் தொடர்பாக இந்நிலங்கள் கோயில்களின் பெயரில் இல்லை, தனிநபர்களின் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது; எனவே பதிவுக்கான தடையை நீக்கியது சரியான முடிவு என்று அறநிலையத் துறை அமைச்சரும் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ். ரமேஷ் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், வழக்கின் மைய கேள்விகளையே முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையில் அமைச்சர் கருத்து தெரிவிப்பது நீதித்துறை நடைமுறைக்கு மதிப்பளிக்காத செயலாகும். இது நீதிமன்ற விசாரணையின் தன்மையை நீர்த்துப் போகச் செய்வதோடு, ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் தனிநபர் உரிமை கோருவோருக்கு ஆதரவாக அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதிபதிகள் வழக்கை விசாரித்து வரும் வேளையில், அமைச்சர் அவசர கோலத்தில் வெளியிட்ட வார்த்தைகள், நீதிமன்றங்களுக்கு மறைமுக அழுத்தம் தருகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையங்கள் சட்டம், 1959-ன் பிரிவுகள் 21, 34, 78, 79 ஆகியவை கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதே அறநிலையத்துறையின் அடிப்படைச் சட்டப் பொறுப்பு என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அமைச்சரே, கோயில் உரிமை குறித்த சட்டப்பூர்வ ஆய்வு முடிவடையும் முன் தனிநபர் உரிமையை நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசு உண்மையிலேயே பல ஆண்டுகளாக அந்நிலங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு உதவ விரும்பினால் கோயில்களின் இனாம் நிலங்கள் சட்டப்பூர்வமாகத் தனிநபர்களுக்குக் கொடுக்கத் துணிவதற்குப் பதிலாக, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அல்லது பிற அரசு நிலங்களை உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் தகுதியுள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். அதை விடுத்து, தெய்வச் சொத்துக்கள் எனக் கருதப்படும் கோயில் நிலங்களின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்வது எந்த வகையிலும் நியாயமில்லை. ஒருபுறம் கோயில் சொத்துக்கள் மோசடிக்குள்ளாகின்றன என ஒப்புக்கொள்ளும் அமைச்சர், மறுபுறம் அதே வகை நிலங்களுக்குப் பதிவை எளிதாக்குவது கோயில் சொத்துக்களின் பாதுகாப்புக்கு எதிரான அணுகுமுறையாகும்.

நீதிமன்ற வழக்குகள் முடிவடையும் வரை இனாம் நிலங்களில் எந்தவித புதிய பதிவுகளையும் அனுமதிக்கக் கூடாது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை குழு அமைத்து அனைத்து இனாம் நிலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். கோயில் சொத்துகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். நிறைவாக கோயில் சொத்துகள் அரசின் சொத்துக்கள் அல்ல; அவை பொதுமக்களின் மதநம்பிக்கையுடன் இணைந்துள்ள பொது அறக்கட்டளைச் சொத்துக்கள். அவற்றைப் பாதுகாப்பது அரசின் சட்டப்பூர்வக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றத் தவறி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link