‘தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறக்க வேண்டும்’

தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களூக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 100 ஆண்டுகளும் மேலாகத் தமிழ்நாடு – கர்நாடகா இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. இது தொடர்பான வழகில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு நீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பை அமல்படுத்தவும், நீர் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீர் மேலாண்மை மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, இந்த இரண்டு அமைப்புகளில் அவ்வப்போது கூடி இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்த சூழலில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தன்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த ஜூலை 28ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பிலிகுண்டுலுவில் 3.422 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி விகிதாச்சார அடிப்படையில் நீரை திறக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், கர்நாடகா அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள், மழைப்பொழிவு குறைவாக உள்ளது. அதனால் குடிநீருக்கும் பெங்களூரு நகருக்கும் காவிரி நீர் தேவைப்படுகிறது எனக் கூறி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (28-07-26) காணொளி மூலமாக டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, 3,500 அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து 4.50 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறக்க வேண்டும் என்ற பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு வழங்கியுள்ளது. இந்த பரிந்துரையின்படி, 4.50 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி ஒழுங்காற்று குழு என்பது, காவிரி நீர் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கக்கூடிய ஒரு அமைப்பாகும். இந்த குழு வழங்கக்கூடிய பரிந்துரைகளை சரிபார்த்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link