டில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை; ஆறாக மாறிய சாலைகளால் வாகனங்கள் ஸ்தம்பிப்பு

புதுடில்லி: டில்லி தேசிய தலைநகர் பகுதியில் பெய்த கனமழையால், சந்தை பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து முடங்கியது.

டில்லியில் மழை துவங்கியதைத் தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் தனது எச்சரிக்கை நிலையை படிப்படியாக உயர்த்தியது. முதலில் மஞ்சள்; பின்னர் ஆரஞ்சு; இறுதியாக மதியம் 12.25 மணிக்கு அதிக கன மழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தலைநகர் முழுவதும் இடி, மின்னல் மற்றும் தீவிர மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டது.

நொய்டா, காசியாபாத் மற்றும் குர்கான் ஆகிய இடங்களிலும் மிகக் கனமழை பதிவானது. காலையில் இருந்தே இடைவிடாது பெய்த மழையால், நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. கன்னாட் பிளேஸ், ஜன்பத், லுட்யன்ஸ் டில்லியின் பல சாலைகள், பாரத் மண்டபம் சாலை, பாரகம்பா சாலை, ஐ.டி.ஓ., அருகிலுள்ள மதுரா சாலை, காளிந்தி குஞ்ச் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

பல சாலைச் சந்திப்புகளில், அதிகளவில் மழைநீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து மந்தமானது. நீரில் மூழ்கிய சாலையை வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

டில்லியின் பரபரப்பான மொத்த விற்பனைச் சந்தைகளில் ஒன்றான, சதார் பஜாரில், இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியது. பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் வாடிக்கையாளர்கள், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டில்லியில் இன்று காலை, பெரும்பகுதி வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் சென்றன. பாதசாரிகள் குடைகள் மற்றும் பஸ் நிறுத்தங்களின் கீழ் தஞ்சம் புகுந்தனர்.

கிரேட்டர் கைலாஷ்- 2 முதல் சாவித்ரி சினிமா வழியாக, சிராக் டில்லி, ஹவுஸ் காஸ் மற்றும் ஆர்.கே.புரம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, சங்கமம் விஹார் முதல் கான்பூர் வரை எம்.பி.சாலை வழியாகவும் இருபுறங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

பருவமழை மீண்டும் தீவிரமடையும் காரணம்!

தென்மேற்குப் பருவமழை ஆரம்பத்தில் மந்தமாகவே இருந்தது. ஜூன் மாத இறுதியில், தேசிய அளவில் மழைப்பற்றாக்குறை 40 சதவீதமாக இருந்தது. ஜூலை மாதத் தொடக்கத்தில் பெய்த மழையால், இந்தப் பற்றாக்குறை 16 சதவீதமாகக் குறைந்தது, இருப்பினும், சில பகுதிகளில் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. இந்த வாரம் வரை டில்லியில் ஜூலை மாத மழைப்பொழிவு, மாதாந்திரத்தின் இயல்பான அளவான 195.8 மி.மீ., அளவை விடக் குறைவாகவே இருந்தது.

சப்தர்ஜங் பகுதியில், மொத்தம் 160.3 மி.மீ., மழை மட்டுமே பதிவாகியிருந்தது. இதில், கடந்த 15 நாட்களில், வெறும் 27.5 மி.மீ மழை மட்டுமே பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பருவமழை மீண்டும் தீவிரமடைந்ததற்கு, பருவமழை புத்துயிர் பெற்றதும், அதனுடன் பிற வானிலை அமைப்புகள் இணைந்ததும் காரணமாக அமைந்துள்ளன.

தென்மேற்கு பருவமழை காலத்தில், உள்நாட்டிற்குள் நகரும் முதல் வங்காள விரிகுடா காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி என்று, வானிலை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘இரண்டு மேல்-காற்று சூறாவளி சுழற்சிகள், இந்த நிலையை முழுமையாக்குகின்றன. அவற்றில் ஒன்று, தென்மேற்கு ராஜஸ்தானின் மீது பருவமழைப் பள்ளத்தின் மேற்கு முனையில் அமைந்துள்ளது; மற்றொன்று, மத்திய உத்தரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளில், டில்லி தலைநகர் பிரதேசத்தின் அருகில் உள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்றும் ஆங்காங்கே கன மழை முதல் மிகக் கனமான மழை பெய்யும் என்றும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 வரை பரவலான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானாவிலும் கொட்டியது கனமழை

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளிலும், கனமழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் நிலவி வந்த வெப்பமான வானிலை மாறி, மக்களுக்கு இதமான சூழ்நிலையை அளித்தது. இருப்பினும், மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, பஞ்சாபின், ஷஹீத் பகத் சிங் நகரில் – 15.2 மி.மீ., பதிண்டாவில் -14.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. லூதியானாவில் – 13.6 மி.மீ., பதான்கோட்டில் – 9.8 மி.மீ., ஹோஷியார்பூரில்- 4 மி.மீ., ஜலந்தரில் -3.5 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரில் 1.7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஹரியானாவைப் பொறுத்தவரை, அம்பாலாவில் 0.1 மி.மீ., மழையும், பிவானியில் 4.4 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. கர்னால், மகேந்திரகர் மற்றும் சோனிபட் ஆகிய இடங்களில், முறையே 3 மி.மீ., 1 மி.மீ., மற்றும் 2.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

இருவர் உடல்கள் மீட்பு

கிழக்கு டில்லியின் காந்தி நகர் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில், நான்கு பேர் நீரில் மூழ்கினர். இவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையை சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேடுதலில், இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வானிலை சீரானதும் மீட்பு பணி துவங்கும் என்றும் அதிகாரிகள் கூறினர். உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போன மற்றவர்களின் விவரங்கள் கண்டறியப்படவில்லை.

Source link