முசாபராபாத்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில், சட்டசபையில் அகதிகளுக்கான இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த ஜூன் 5ம் தேதி முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் நேற்று( ஜூலை 27) தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் வன்முறை, முறைகேடு உள்ளிட்டவை நடந்தன.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஜே.ஏ.சி.சி., எனப்படும் அவாமி அதிரடி கூட்டுக்குழு, தங்களின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பேரணியில் ஈடுபட்டனர். அதில் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் ஜேஏஏசி நிர்வாகிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை முன்னிட்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அங்கு பாகிஸ்தான் குவித்துள்ளது. தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் குரலை ஒடுக்கும் வகையில், ஜேஏஏசி அமைப்பினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தும்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இணையதள மற்றும் மொபைல் போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் மற்றும் மின்சார இணைப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
