கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ்.
சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசியல் களத்திலும் சரி, மீடியா வட்டாரத்திலும் சரி கடந்த சில மாதங்களாகவே இவர் தான் ஹாட் டாபிக்.
தமிழ் நாட்டுக்காரரான இவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரது தொகுதிகளின் எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்ததிலிருந்தே, “கெரோ’, ‘போராட்டம்’, ‘கோ பேக் கோஷம்’ என இவருக்கு எதிராக ரவுண்டு கட்டத் தொடங்கியது திரிணாமுல் காங்கிரஸ்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூபா மொய்த்ரா ‘குயிக் கன் முருகன்’ பட போஸ்டரைத் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்படும் முருகனைத் தயவு செய்து கட்டுப்படுத்துங்கள்’ எனத் தேர்தல் ஆணையத்தை டேக் செய்தார்.
‘அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு என்னிடம் துப்பாக்கிகள் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் நாலரை ஆண்டுகள் காவல்துறையில் இருந்தபோது பல ரக துப்பாக்கிகளைக் கையாள பயிற்சி பெற்றிருப்பதுடன், சட்டபூர்வமாகத் திறம்பட அவற்றைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்’ என அவருக்குப் பதில் தந்தார் முருகன்.
