புதுடில்லி: சட்டவிரோத துப்பாக்கி விற்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டில்லி மாநகரப் போலீசின் புறநகர் வடக்கு மாவட்ட துணை கமிஷனர் ஹரேஷ்வர் சுவாமி கூறியதாவது: தனிப்படை போலீசார் 19ம் தேதி தாஜ்பூர் கலான் பகுதியில், அமித்,37, என்பவரை கைது செய்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், பிரதீப் குமார் என்ற நீத்து, 37, அவரது கூட்டாளிகள் சஹில்,26, விகாஷ்,25, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
மூவரும் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு ஷாட் கன், இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் மற்றும் 22 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல, பதுக்கி வைத்திருந்த 19.78 லட்சம் ரூபாய் பண்ம், 916 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளி மற்றும் 13 விலை உயர்ந்த வாட்சுகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், குண்டு துளைக்காத பாதுகாப்பு வசதி கொண்ட ஒரு சொகுசு கார், சாதாரண வகை சொகுசு கார், சூதாட்ட மின்னணு சாதனங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.நான்கு பேரிடமும் நடத்திய விசாரணைப்படி, பாவானாவில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்து வந்த ரவி சிங்,29, முகமது சஹில்,25) மற்றும் முஹமது அக்ரம் என்ற சஹில்,22 ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்கள், தோட்டாக்களைச் சேமிக்கும் மேகசீன்கள், தோட்டாக்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.அலிப்பூர் மற்றும் நரேலா தொழிற்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டன. விசாரணை நடக்கிறது.
