நமது நிருபர்
தொகுதிகளை குறைக்கும் திமுக முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் தனித்துப்போட்டியிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு, பொதுக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் திமுக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு, கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்தலில், 6 தொகுதிகள் தர முடியாது; 5 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.இதனால், இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம் என்று கூறி, கட்சியினரை தயார் செய்து வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
திமுக முடிவை ஏற்பதா, அடுத்து என்ன முடிவு செய்வது என்பது பற்றி தீர்மானிக்க, இன்று அந்த கட்சியின் மாநிலக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடந்தன.
இதில், நமக்கு செல்வாக்குள்ள இடங்களில் மட்டும் தனித்துப் போட்டியிடலாம்; மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிக்கலாம் என்று கட்சியினர் தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகளும் இந்த மனநிலையில் தான் இருக்கின்றனர். இதனால் திமுக கூட்டணி, உடையும் நிலையில் இருக்கிறது.
விசிக நிலை என்ன?
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இன்னொரு முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தொகுதி குறைப்பை ஏற்க மறுத்து முரண்டு பிடிக்கிறது. அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனே நேரில் பேசியும் பிரச்னை தீரவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியை போல, தாங்களும் முடிவு எடுப்பதா, திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொள்வதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில் திருமாவளவன் தவிப்பதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர்.
