தகவல் ஆணையர் நியமனங்களை 6 வாரங்களில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்​நாட்​டில் காலி​யாக உள்ள தலை​மைத் தகவல் ஆணை​யர் மற்​றும் தகவல் ஆணை​யர் பணி​யிடங்​களை அடுத்த 6 வாரங்​களுக்​குள் நிரப்ப வேண்​டும் எனத் தமிழ்​நாடு அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மத்​திய, மாநில தகவல் ஆணை​யத்​தில் தகவல் ஆணை​யர்​கள் நியமனத்​தில் ஏற்​படும் கால​தாமதத்​தால் தகவல் அறி​யும் விண்​ணப்​பங்​கள் ஏராள​மாக தேங்​கி​யுள்​ள​தாக​வும், கேட்​கப்​படும் தகவல்​கள் கிடைக்​காத நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக கூறி அஞ்​சலி பரத்​வாஜ் என்​பவர் கடந்த 2018-ம் ஆண்டு உச்​சநீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த உச்​சநீ​தி​மன்​றம், கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்​தது. அதில், தகவல் ஆணை​யத்​தின் ஆணை​யர்​களின் நியமனங்​கள் குறித்த காலத்​தில், வெளிப்​படைத்​தன்​மை​யுடன் இருக்க வேண்​டும் எனத் தெரி​வித்​ததோடு, மத்​திய, மாநில அரசுகளுக்​குப் பல்​வேறு உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தது.

ஆனால் இந்த தீர்ப்பை நடை​முறைப்​படுத்​த​வில்லை எனக்​கூறி மனு​தா​ரர் அஞ்​சலி பரத்​வாஜ் உச்​சநீ​தி​மன்​றத்தை மீண்​டும் நாடி​னார். இதனையடுத்து அந்த மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், ஏற்​க​னவே பிறப்​பித்த உத்​தரவை எந்த தாமதமும் இன்றி அமல்​படுத்த வேண்​டும் என்​றும், அவ்​வாறு அமல்​படுத்​தப்​பட்ட பின்பு அதுகுறித்த நிலை அறிக்​கையை உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​ய​வும் ஆணை​யிட்​டது.

இந்​நிலை​யில், மத்​திய மற்​றும் மாநிலத் தகவல் ஆணை​யங்​களில் காலி​யாக உள்ள பணி​யிடங்​களை விரைந்து நிரப்​பக் கோரிய வழக்​கு, உச்​சநீ​தி​மன்​றத்​தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பிர​சாந்த் பூஷன், தமிழ்​நாட்​டில் தலை​மைத் தகவல் ஆணை​யர் உட்பட 5 பணி​யிடங்​கள் காலி​யாக இருப்​ப​தாக​வும், அவை இது​வரை நிரப்​ப​டா​மல் உள்​ள​தாக சுட்​டிக்​காட்​டி​னார்.

அதற்கு பதில் அளித்த தமிழ்​நாடு அரசு வழக்​கறிஞர், கடந்த மாதம் தான் அதி​காரி​கள் ஓய்வு பெற்​றனர், அதன் காரண​மாகவே இக்​காலி​யிடங்​கள் ஏற்​பட்டன என்​றும், தேர்​வுக் குழு அமைக்​கப்​பட்டு நடவடிக்​கைகள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் நியமனங்​களை முடிக்க 3 மாத காலம் அவகாசம் வேண்​டுமெனக் கோரி​னார்.

ஆனால் தமிழக அரசு தரப்பு கோரிக்​கையை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், தகவல் ஆணை​யங்​கள் முடங்​கு​வது பொது​மக்​களின் உரிமை​யைப் பாதிக்​கும், எனவே 3 மாத கால அவகாசம் வழங்க முடி​யாது எனவும், 6 வாரங்​களுக்​குள் நியமனங்​களை முடித்து அதுகுறித்த அறிக்​கையை உச்​சநீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​ய​வேண்​டும்​ என ஆணை​யிட்​டு, வழக்​கை ஒத்​திவைத்​தனர்​.

Source link