புதுடெல்லி,
நமது நாட்டில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6,372 கோடி செலவிட்டுள்ளது. அதே நிதி ஆண்டில் கிழிந்துபோன ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள் 2,380 கோடி எண்ணிக்கையில் திரும்ப பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு கிழியும் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று மீண்டும் அச்சடிப்பதற்காக ஆகும் செலவை குறைப்பதற்காக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது. அதன்படி, தலா ரூ.100 கோடி வீதம் 200 கோடி எண்ணிக்கையில் ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சோதனை அடிப்படையில் கள ஆய்விற்காக வெளியிடப்பட உள்ளன.
கள ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புடைய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. அதே நேரம் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த முயற்சித்தது. இருப்பினும் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தும் திட்டம் வேகமெடுத்துள்ளது.
