நிருபர்களை சரமாரியாக தாக்கியதாக தவெக – எம்.எல்.ஏ., மீது புகார்

சோளிங்கர்: நிருபர்களை தாக்கியதாக, சோளிங்கர் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., கபில் மீது ராணிப்பேட்டை எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள ஒரு தியேட்டரில், சில நாட்களுக்கு முன், முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த, எம்.எல்.ஏ., கபிலிடம், ‘யூ டியூபர்’ சிவா, படம் குறித்து கேட்க மைக்கை நீட்டிய போது, கபில், அவரை தாக்க முயன்றுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. செய்தியும் வெளியானது.

இதனால் கபில், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, சிவாவை தேடினர். நேற்று முன்தினம் இரவு, சோளிங்கர் அண்ணாசிலை அருகே உள்ள சிவா வீட்டிற்கு கபில், அவரது தம்பி தனஞ்செழியன், 10க்கும் மேற்பட்டோருடன் சென்றனர். சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று தாக்கி உள்ளனர். இது குறித்து அறிந்து, செய்தி சேகரிக்க சென்ற நாளிதழ் நிருபர்கள் அரங்கநாதன், 50, கல்யாணசுந்தரம், 70, ஆகியோரையும், சரமாரியாக தாக்கி உள்ளனர்.

நிருபர்களின் அலறல் கேட்டு, பொதுமக்கள் அந்த கடை முன்பு குவிந்ததும், சோளிங்கர் போலீசார் விரைந்து அவர்களை மீட்டனர். போலீஸ் எஸ்.ஐ., முனீர் பாஷா, நிருபர்களின் மொபைல் போனில் பதிவு செய்திருந்த தாக்குதல் வீடியோக்களை அழித்துள்ளார்.

காயமடைந்த நிருபர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களின் உறவினர்கள், இந்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். காயமடைந்த மூன்று பேரும், சோளிங்கர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ராணிப்பேட்டை எஸ்.பி., சிபினிடம், ராணிப்பேட்டை பத்திரி கையாளர்கள் நேரில் புகார் அளித்துள்ளனர். தாக்குதலை கண்டித்து, பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link