சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமீபத்தில் பங்கேற்ற பள்ளி விழாவில், ‘ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்’ எனக்கூறி, என்.சி.சி., மாணவர்கள் வரவேற்றனர்.
அதை, ‘ஜெய் ஸ்ரீராம்’ என, தவறாக புரிந்து கொண்ட வன்னி அரசு, பள்ளி மேடையிலேயே பா.ஜ.,வை வாய்க்கு வந்தபடி வசை பாடியுள்ளார்.
இது, ஹிந்து மதத்தின் மீதும், பா.ஜ., மீதும் அவர் கொண்டுள்ள அளவு கடந்த வெறுப்பின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
பள்ளிகளில் அரசியல் பேசக்கூடாது என்ற அடிப்படை கூட தெரியாமல், மாணவர்களிடையே வெறுப்பு பிரசாரத்தை முன்னெடுத்தது, அரசியல் மாண்பற்ற செயல்.
காலங்காலமாக இந்திய ராணுவ படைகளிலும், சீருடை பணிகளிலும் மூத்தவர்களை, ‘ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்’ என்று கூறுவது மரபு. அதேபோல், இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஒவ்வொரு ஹிந்து கடவுளின் பெயரை கூறி கோஷங்களை எழுப்புவதும் வழக்கமான ஒன்று.
இங்கு யாரும், எதையும் புதிதாக திணிக்கவில்லை என்பதை, தேசிய மாணவர் படைக்கும், சாரணர் படைக்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டிய பள்ளி மாணவர்களிடையே, தனது அமைச்சர்கள் இதுபோன்ற வெறுப்பு கருத்துகளை பரப்புவதை, முதல்வர் விஜய் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
