நாமக்கல் மாளிகையில் முதல்வர் அலுவலகம்; தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

சென்னை: சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, முதல்வர் விஜய் அலுவலகத்தை மாற்ற, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் ஆகியோர், முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதம்:

முதல்வர் விஜய் அறையும், அலுவலகமும் பாரம்பரிய கோட்டை கட்டடத்தில் இருந்து, நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது தளத்திற்கு மாறவுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, தற்போதுள்ள முதல்வர் அலுவலகத்திற்கு மாற உள்ளன.

உள்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறையின் பணியாளர் களையும், அத்துறைக்கு உட்பட்ட கோப்புகளையும், பதிவேடுகளையும், முதல்வர் அலுவலகத்திற்கு ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்வதற்கு போதுமான இடவசதி இல்லை. செய்தித்துறை, தலைமை செயலகத்தில் செயல்பட வேண்டும்.

தலைமை செயலக பிரதான கட்டடத்தில் ஏதேனும் பெரும் தீவிபத்து ஏற்பட்டால், உள்துறையின் சில பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள், அந்த விபத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையில் பணியாற்றி வருகின்றனர்.

இடமாற்றத்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்கும், மாற்று வழிகளை மேற்கொள்வதற்கும் சங்க நிர்வாகிகளை அழைத்து, பொதுத் துறை அதிகாரிகள் பேசவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உணவருந்த இடமின்றி ஊழியர்கள் தவிப்பு
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, உணவருந்த தனி அறை எதுவும் இல்லை. இதனால், திறந்த வெளியில், மரத்தடியில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். சிலர், அலுவலகம் வெளியே, வராண்டாவில் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். மழைக் காலங்களில், மரத்தடியில் உணவு அருந்துவோர், வராண்டாவில் சாப்பிட வரும்போது, இட நெருக்கடி ஏற்படுகிறது.
தற்போது, நாமக்கல் கவிஞர் மாளிகையில், ஏழு மற்றும் எட்டாவது தளங்களில் உள்ள உணவு அருந்தும் அறைகள், அலுவலர்களுக்குரிய அறையாக மாற்றப்பட உள்ளதால், அங்கு சாப்பிடுவோருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source link