நாடு முழுவதும் நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசால் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா-2026 கொண்டுவரப்பட்டது. கேள்வித்தாள் கசிவுகள், தேர்வுகளில் முறைகேடுகள், போலி வேட்பாளர்கள் மற்றும் ஓஎம்ஆர் தாள்களில் முறைகேடு செய்தல் போன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதே இந்தத் திருத்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். தற்போது இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.
நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை
இந்த நிலையில் மக்களவையில் விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், தேர்வு முறையே சீர்கெட்டுப் போயிருப்பதால் தான் நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் நீட் , யுஜிசி-நெட் , ஜேஇஇ போன்ற தேர்வுகளை கோடிக்கணக்கான இந்திய மாணவர்கள் எழுதுகிறார்கள். தேர்வுக்கூடத்திற்குள் நுழையும் போது அவர்கள் வெறும் ஹால் டிக்கெட்டை மட்டும் கொண்டு செல்லவில்லை.
பக்கா காய் நகர்த்தும் DMK-கூட்டணி கட்சிகளுக்கு சவால்?
தங்கள் பெற்றோரின் தியாகங்கள், கோச்சிங் சென்டர்களுக்காக செலவழித்த சேமிப்பு, குடும்பத்தின் கனவுகள் என அனைத்தையும் சுமந்து செல்கிறார்கள். ஆனால், ஒரு வினாத்தாள் கசியும் போது, அந்த மாணவனின் உழைப்பும், கனவும் முற்றிலுமாகத் திருடப்படுகிறது.அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ₹10 கோடி அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் உள்ளன. சரிதான்..ஆனால், தவறு நடந்து பாதிப்பு ஏற்பட்ட பிறகு தண்டனை வழங்கி என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார்.
பாதிப்பு ஏற்பட்ட பின் தண்டனை கொடுத்து என்ன பயன்?
மேலும் வினாத்தாள் கசிப்பில் தொடர்புடைய குற்றவாளி தண்டிக்கப்படும் போது, அதற்குள்ளாகவே லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாழாகியிருக்கிறது. வினாத்தாள் கசிவு என்பது தனிப்பட்ட முறைகேடு அல்ல, அது நமது தேர்வு அமைப்பின் கட்டமைப்பு பலவீனத்தைக் காட்டுகிறது. எனவே, தவறு நடந்த பிறகு தண்டிப்பதை விட, தவறு நடக்காமல் தடுப்பதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும்.அதேபோல், சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
நமது நீதித்துறைக்கு அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் உண்மையிலேயே இருக்கிறதா? ஒரே ஒரு நாளில், சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த நெருக்குதல் நிறைந்த தேர்வு முறையை இந்தியா மாற்ற வேண்டும்.வெளிநாடுகளில் நடத்தப்படும் SAT அல்லது GRE தேர்வுகளைப் போல, ஆண்டு முழுவதும் கணினி வழியில் பலமுறை தேர்வு எழுதும் முறையை ஏன் இங்கு கொண்டு வரக்கூடாது? மாணவர்கள் அதில் தங்களின் சிறந்த மதிப்பெண்ணைக் கல்லூரிக் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே.
தேர்வு முறையை மாற்ற கோரிக்கை
இது தேர்வு சார்ந்த மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, வினாத்தாள் கசிவுக்கான வாய்ப்பையும் முற்றிலும் தடுக்கும்.இன்று 1.4 லட்சம் மருத்துவ இடங்களுக்கு 22 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகிறார்கள்.இந்த கடும் போட்டியே கோச்சிங் மையங்களின் ஆதிக்கத்திற்கும், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது. இதனால்தான் மாணவர் தற்கொலைகள் 2014-ல் 8,000 ஆக இருந்தது, இன்று 14,600 ஆக உயர்ந்துள்ளது.
இவை வெறும் எண்கள் அல்ல; ஒரு பெற்றோரின் பிள்ளை, ஒரு வீட்டின் எதிர்காலம். ஒரே ஒரு தேர்வில் தோற்பது வாழ்க்கையிலேயே தோற்பதற்குச் சமம் என்ற தவறான எண்ணம் மாணவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது.எனவே, உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையையும், இடங்களையும் அரசு உயர்த்த வேண்டும்.மாணவர்களின் கடமை தேர்வுக்குத் தயாராவது மட்டுமே. அவர்களின் உழைப்புக்கு வீண் போகாத சூழலை உருவாக்குவது நமது கடமை. இந்த மசோதா நிறைவேறலாம், ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல.முழுமையான சீர்திருத்தம் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் என்று சசி தரூர் கூறினார்.
