வினாத்தாள் கசிவைத் தடுக்க தண்டனை மட்டும் போதாது; சொல்கிறார் சசி தரூர்

புதுடில்லி: ‘வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கு, அரசு கொண்டு வந்துள்ள தண்டனை குறித்த மசோதா மட்டும் போதாது. தேர்வு முறையைச் சரிசெய்யும் அமைப்பே நமக்குத் தேவை,’ என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவுக்கான தண்டனையை அதிகரிக்கும் திருத்த மசோதா குறித்து நேற்று அவர் பேசியதாவது; முந்தைய ஆட்சி (காங்கிரஸ்) காலத்தில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்களை சுட்டிக்காட்டி பாஜ உறுப்பினர்கள் பேசினர். எந்தக் கட்சியின் ஆட்சியில் அதிக வினாத்தாள் கசிவு நடந்தது என்பது கேள்வியல்ல. தேர்வு அமைப்பே சீரழிந்து கிடக்கிறது. அதை எப்படிச் சரிசெய்வது என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.

நமது குழந்தைகளின் கனவுகளை விற்பவர்களை தண்டிக்கலாம். 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 கோடி அபராதம் என அவர்கள் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், வினாத்தாள் கசிந்த பிறகே தண்டனை வழங்கப்படுகிறது. நமக்குத் தேவை குற்றம் நடந்த பிறகு தண்டனை கொடுப்பது அல்ல, வினாத்தாள் கசிவே நடக்காமல் தடுக்கும் அமைப்பாகும்.

நமது நாட்டில் உள்ள விரைவு நீதிமன்றங்கள் ஏற்கனவே கடும் பணிச்சுமையில் உள்ளன. கூடுதல் நீதிபதிகள், நீதிமன்ற அறைகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களை நியமிக்காத வரை தீர்வு கிடைக்காது, இவ்வாறு அவர் கூறினார்.

Source link