புதுடில்லி: வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, எல்பிஜி ஒதுக்கீட்டை மேலும் 20 சதவீதம் அதிகரித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேற்காசியாவில் போர் பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு மார்ச் 23ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது; வணிக ரீதியான எல்பிஜிக்கு ஏற்கனவே 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் 23ம் தேதி முதல் கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் மொத்த ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் 20 சதவீதம் எரிவாயு ஒதுக்கீட்டில் ஹோட்டல்கள், தாபாக்கள், தொழிற்சாலை கேன்டீன்கள், உணவு பதப்படுத்துதல், பால் பண்ணைகள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் இயக்கப்படும் மலிவு விலை உணவகங்கள், சமூக சமையலறைகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் அனைவரும் எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்திருக்க வேண்டும். வரும் காலத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பிற்கு மாறுவதற்குத் தயாராக உள்ளவர்கள் மற்றும் அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த 50% ஒதுக்கீட்டின் கீழ் எரிவாயு வழங்கப்படும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
