காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின், குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் பிரீத்தி பவார் மற்றும் பிரியா கங்காஸ் ஆகியோர் தங்கள் எடை பிரிவுகளில் அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தது இரண்டு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற பிரீத்தி மற்றும் தற்போதைய ஆசிய சாம்பியனான பிரியா ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற போட்டிகளில் வெவ்வேறு விதமான வெற்றிகளை பதிவு செய்தனர்.
பதக்கம் உறுதி:
பெண்களுக்கான 54 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட பிரீத்தி, வட அயர்லாந்தின் நிக்கோல் கிளைடை 5-0 என்ற கணக்கில் ஒருமனதான தீர்ப்பின் மூலம் வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்; இதன் மூலம் தனக்கான குறைந்தபட்ச வெண்கலப் பதக்கத்தையும் உறுதி செய்தார்.
22 வயது இந்திய வீராங்கனையான பிரீத்தி, முதல் சுற்றில் நேர்த்தியான நுட்பங்களால் ஆதிக்கம் செலுத்தினார். நடுவர்கள் அவரது ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், முதல் சுற்றுகான புள்ளிகளில் நான்கு பேர் அவருக்கு ஆதரவாக 10-9 என்றும், ஐந்தாவது நடுவர் 10-8 என்றும் மதிப்பெண்களை வழங்கினர்.
முதல் பதக்கம்:
இரண்டாவது சுற்றிலும் அதே தீவிரத்தை தக்கவைத்த அவர், தனது சிறந்த வேகம், துல்லியம் மற்றும் ‘ரிங்’கில் செயல்படும் திறனை வெளிப்படுத்தினார். மீண்டும் ஒருமுறை ஐந்து நடுவர்களின் மதிப்பெண்களையும் தன்வசப்படுத்திய அவர், மூன்று நடுவர்களிடம் இருந்து 10-9 புள்ளிகளையும், மற்ற இருவரிடம் இருந்து 10-8 புள்ளிகளையும் பெற்று போட்டியின் முழு கட்டுப்பாட்டையும் தன் கையில் எடுத்தார்.
வெற்றி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், இறுதி சுற்றில் நிதானமாக செயல்பட்ட பிரீத்தி, பல்வேறு வகையான குத்துகளையும் சிறந்த தாக்குதல் முறைகளையும் வெளிப்படுத்தி, ஒருமனதான தீர்ப்பின் மூலம் முழுமையான வெற்றியை பதிவு செய்தார்.
இந்த பதக்கம் பிரீத்தியின் விளையாட்டு வாழ்க்கையில் காமன்வெல்த் போட்டிகளில் அவர் பெறும் முதல் பதக்கமாக அமையும். ஹாங்சு ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற இவர், அரையிறுதியில் ஜாம்பியாவின் கேத்தரின் ம்வாபேயை எதிர்கொள்ளவுள்ளார்.
அரையிறுதியில் பிரியா:
பின்னர், பெண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில், ஸ்காட்லாந்தின் உள்ளூர் வீராங்கனை நியாமி மிட்செல்லை 4-1 என்ற ‘ஸ்பிலிட் டெசிஷன்’ முறையில் வீழ்த்தி பிரியாவும் அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் ஏப்ரல் மாதம் உலான்பாதரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றில் ‘பை’ மூலம் நேரடியாக அடுத்த சுற்றுக்கு சென்ற 20 வயதான இந்திய வீராங்கனை பிரியா, முதல் சுற்றில் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்டார். நடுவர்களின் மதிப்பெண் பட்டியலில் முதல் சுற்றில் மிட்செல் 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
இரண்டாவது சுற்றை அதே 4-1 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். முன்னாள் ஆசிய சாம்பியனும் உலக சாம்பியன்ஷிப் வெண்கல பதக்கம் வென்றவருமான பர்வீன் ஹூடா, இங்கிலாந்தின் சாச்சா ஹிக்கியிடம் 2-3 என்ற கணக்கில் நெருக்கமான தோல்வியை சந்தித்து, பெண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இருந்து வெளியேறினார்.
இந்த போட்டியில், முதல் இரண்டு சுற்றுகளில் பெரும்பாலான நடுவர்களின் மதிப்பெண் அட்டவணைகளின்படி பின்தங்கியிருந்த இந்திய வீராங்கனை, கடைசி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றார்; இருப்பினும், முந்தைய சுற்றுகளில் ஏற்பட்ட பின்தங்கிய நிலையை ஈடுசெய்ய அது போதுமானதாக அமையவில்லை.
