விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

ஆந்திர மாநிலம் விஜயவாடா – இந்திரகேலாத்திரி மலையில் உள்ள கோயிலில் வீற்றிருக்கும் கனகதுர்கையம்மன், தேவி மகிஷாசுரமர்த்தினியாக போற்றப்படுகிறாள். திரேதாயுகத்தில் தேவி, இங்கு சுயம்புவாகத் தோன்றியதாக கூறப்படுகிறது.

ஒருகாலத்தில் இந்த இடம் தரிசு நிலமாக இருந்தது. பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், இங்கிருந்து கிருஷ்ணா நதி பாய்வதற்கு நிறைய தடைகள் இருந்தன. சிவபெருமான் இங்கிருந்து கிருஷ்ணா நதி வெளியே செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.

இதனால், இந்த இடம் மிகவும் செழித்து வளம் பெற்றது. பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்த இடத்தில் தவம் புரிந்து சிவபெருமானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான். போரில் வெற்றி பெற அருள வேண்டும் என்று ஈசனிடம் வேண்டினான். இதனாலேயே இந்த இடம் விஜயவாடா என்று அழைக்கப்படுகிறது.

இந்திரகீலா முனிவர் மலை உருவில் தவம் புரிந்து வந்தார். அவருக்கு மகிஷாசுரன் என்ற அரக்கன் பல இன்னல்களைக் கொடுத்து வந்தான். இருப்பினும் முனிவரின் தவம் தொடர்ந்தது. முனிவரின் தவத்தில் மகிழ்ந்த அம்பிகை, அவருக்கு காட்சி அருளினாள்.

இந்த மலையை இருப்பிடமாகக் கொண்டு, அப்பகுதியை தேவி காத்தருள வேண்டும் என்று அம்பிகையிடம் முனிவர் வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அரக்கனைக் கொன்றாள் தேவி.

4 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் 8 கரங்களிலும் ஆயுதம் ஏந்தி மகிஷாசுரனை மிதித்தபடி, தங்க ஆபரணங்கள், மலர் மாலைகள் சூடி பக்தர்களையும், அப்பகுதி மக்களையும் காத்தருள்கிறாள்.

Source link