மத்தியஸ்தர்கள் அமெரிக்கா மற்றும் ஈரான் என இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வரும் வேளையில், சண்டையில் ஏற்பட்ட ஒரு சிறிய இடைநிறுத்தத்தை உடைத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறியது.
அனைத்து ஈரானிய ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு சமூக ஊடகங்களில் தெரிவித்தது. மேலும், அமெரிக்க படைகள் “விழிப்புடனும் உயர் தயார் நிலையிலும் உள்ளன” என்றும் கூறியுள்ளது.
டிரம்ப் நம்பிக்கை:
முன்னதாக தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தில் இருந்த நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
“ஏதாவது நடப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனக்கு மிகுந்த பொறுமை இருக்கிறது… என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்று அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் கூறினார்.
ஈரான் மறுப்பு:
மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெஹ்ரான் முன்னதாக மறுத்திருந்தது.
“பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து மத்தியஸ்தர்கள் எங்களுக்கு தகவல்களை தெரிவிக்கலாம். ஆனால், தற்சமயம் நாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை,” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார்.
ராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பு அளிப்பதற்காக, மத்தியஸ்த நாடுகள் தன்னை நிலைமையை சற்று நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக டிரம்ப், அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸிடம் கூறினார். மேலும், “நாங்கள் ஈரானுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
