தி.மு.க. தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வி.வி.பாட் (VVPAT) கருவிகளின் தொழில்நுட்பச் சோதனை மற்றும் சரிபார்ப்பு புதன்கிழமை (இன்று) முதல் தொடங்குகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் இந்த சோதனை நடைபெற உள்ளது. கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 42 பாலேட் யூனிட்டுகள் (Ballot Units), 14 கன்ட்ரோல் யூனிட்டுகள் (Control Units) மற்றும் 14 வி.வி.பேட் (VVPAT) கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தமிழக வெற்றிக் கழக (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, இ.வி.எம். இயந்திரங்களின் செயல்பாட்டைச் சரிபார்க்க அவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
இந்தச் சோதனையில் கலந்து கொள்ள கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், “இது வாக்குகளை மறுஎண்ணிக்கை செய்வதற்கான நடவடிக்கை அல்ல. இ.வி.எம். இயந்திரங்கள் சரியாக செயல்பட்டனவா என்பதை உறுதி செய்யும் தொழில்நுட்பச் சோதனை மட்டுமே” என்று தெரிவித்தனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இந்தச் சோதனை நடத்த ரூ.47,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படி சோதனை நடைபெறும்?
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் ஒரு வாரம் இந்தச் சோதனை நடைபெறும்.
முதலில், இயந்திரங்களில் சேமிக்கப்பட்டுள்ள வாக்கு விவரங்கள் திரையில் காட்டப்படும். அதை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள், தேர்தல் முடிவுகள் பதிவான படிவம்-20 (Form 20)-இல் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கலாம்.
அதன்பிறகு, இயந்திரத்தில் உள்ள தரவுகள் அழிக்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடத்தப்படும். இதில் வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் சோதனை வாக்குகளை பதிவு செய்யலாம்.
அதன் பின்னர், மனுதாரர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி குறைந்தது 500 வாக்குகள் முதல் அதிகபட்சம் 1,400 வாக்குகள் வரை பதிவு செய்து, இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பது மீண்டும் பரிசோதிக்கப்படும்.
மைக்ரோபிராசஸர் பரிசோதனையும் முடிந்த பிறகு, இ.வி.எம். இயந்திரங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் 2 தொகுதிகளிலும் சோதனை
இதேபோன்று மனு தாக்கல் செய்துள்ள பிற தொகுதிகளிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் கே. சுந்தரின் மனுவை ஏற்று 10 வாக்குச்சாவடிகளின் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
மேலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் எஸ். தங்கபாண்டியனின் மனுவை ஏற்று 14 வாக்குச்சாவடிகளின் இ.வி.எம் மெஷின்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிகளில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் அளித்த மனுக்களையும் தொடர்ந்து அங்கும் இதேபோன்ற இவிஎம் சோதனைகள் நடைபெற உள்ளன.
திருப்பத்தூர் வழக்கு நீதிமன்றத்தில்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தொடர்பான மனு உடனடியாக பரிசீலிக்கப்படாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தத் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆர். சீனிவாச சேதுபதியிடம் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார். அந்தத் தொகுதியில் 18 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இவிஎம் இயந்திரங்கள் சோதனை செய்யப்பட உள்ளன.
இதற்கிடையில், இ.வி.எம். சரிபார்ப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் துறை திங்கள்கிழமை சிறப்பு பயிற்சியும் வழங்கியுள்ளது.
