அசாம் வெள்ள நிவாரணத்துக்கு உதவுங்கள்… ரசிகர்களுக்கு ஆலியா பட் உருக்கமான வேண்டுகோள்

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரைகள், சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளன.

இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உருக்கமான பதிவு

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆலியா பட் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் பல பகுதிகள் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் அசாம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அங்குள்ள மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான்”

மேலும் அவர், “ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற வெள்ளப் பேரழிவு ஏற்படுகிறது. இருந்தாலும் அது நம்மை ஒவ்வொரு முறையும் தயாராக இல்லாமல் ஆக்கிவிடுகிறது. தற்போது அசாமுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவை. அதே நேரத்தில், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கும் நீண்டகால ஆதரவு அவசியம். ” என்று தெரிவித்துள்ளார்.

நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அமைப்புகள் மூலம் நிவாரணப் பணிகளுக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்பது குறித்த தகவல்களையும் விரைவில் பகிர உள்ளதாக ஆலியா பட் தெரிவித்துள்ளார். அசாம் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு நடிகர்கள் சல்மான் கான் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஆலியா பட்டின் இந்த வேண்டுகோளும் கவனம் பெற்றுள்ளது.

Source link