கொளத்தூர் தொகுதி – மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு

சட்டமன்ற தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் (2011, 2016, 2021) ‘ஹாட்ரிக்’ வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார்.

தேர்தல் ஆணையம்

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர்.

தேர்தல் அதிகாரி தகவல்

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பொதுவாகவே தேர்தல் முடிந்த பின்னர், தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் ஏற்பட்டது. குறித்தோ, வேறு ஏதாவது முக்கிய காரணங்களை குறிப்பிட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு முழுமையாக ஆய்வு செய்யும். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு வந்துள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது.

இதில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள மனுவும் அடங்கும். கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை முடிந்தவுடன் அவை ‘சீல்’ வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இந்த எந்திரங்கள் சரி பார்க்கப்படும் என்று அவர் கூறி இருந்தார்.

கொளத்தூர் தொகுதி

இந்நிலையில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு பணி தொடங்கியது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.

சென்னை மாநகராட்சி ஆணையர்

கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் நடைபெறுகிறது.

திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு, தவெக வழக்கறிஞர் அருண், வி.எஸ்.பாபு உதவியாளர் வந்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.

இதேபோன்று புகார்கள் வந்துள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

Source link