திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கருணாவூர் ஊராட்சியில் கோல்டன் பார் நிறுவனத்தின் மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான ஆலை திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலுவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஎஸ்பி சித்ரா தலைமையிலான ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி ஆலையில் உள்ள ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதால், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. சோதனையின் நோக்கம், பரிசோதிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அதிகாரிகள் தரப்பில் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
