துபாய்: சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்தான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரானுக்கு யுஏஇ உள்பட 22 நாடுகள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி, உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. இந்த ஜலசந்தி சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்தாக திகழ்வதால், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், எண்ணெய் ஏற்றுமதியை மட்டும் நம்பி இருக்கும் சவுதி, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் பொருளாதாரமும் சரிவை சந்தித்துள்ளன.
இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து யுஏஇ உள்பட 22 நாடுகள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. யுஏஇ, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, கனடா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, டென்மார்க், நியூசிலாந்து, லத்வியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, செக் குடியரசு, ரோமானியா, பெஹ்ரைன், லூதியானா ஆகிய நாடுகள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
அதில், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தில் குறுக்கிடுவதும், எரிசக்தி வினியோகச் சங்கிலியை முடக்குவதும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் முயற்சிகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டும், என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதம் ஏந்தாத வணிகக் கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட பொது கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
