இந்திய தபால் துறை, விரைவு தபால் (Speed Post) சேவைகளுக்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. மேலும், முதல் முறையாக ‘ஆவணம்’ மற்றும் ‘பார்சல்’ ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்களும் விதிமுறைகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளன.
புதிய விதிகளின்படி, மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள், அச்சிடப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை ‘ஆவணம்’ பிரிவில் சேர்க்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும். வணிகப் பொருட்கள் மற்றும் மறுவிற்பனை செய்யக்கூடிய அனைத்து பொருட்களும் ‘பார்சல்’ பிரிவில் வகைப்படுத்தப்படும்.
வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், வங்கி கணக்கு அறிக்கை, பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவை ஆவணங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் இந்தப் பிரிவில் இடம்பெறும். இதைத் தவிர உள்ள அனைத்து பொருட்களும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும்.
24 மணி, 48 மணி நேர விரைவு சேவை
பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ’24 விரைவு தபால்’ சேவையில் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். ’48 விரைவு தபால்’ சேவையில் அனுப்பப்படும் பொருட்கள் 48 மணி நேரத்துக்குள் சேர்க்கப்படும்.
இந்த சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
புதிய கட்டண விவரம்
24 மணி நேர விரைவு தபால் சேவையில், பொதுமக்களுக்கான கட்டணம் பொருளின் எடை மற்றும் தூரத்தைப் பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராமுக்கு குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94 கட்டணமாக வசூலிக்கப்படும்.
48 மணி நேர விரைவு தபால் சேவைக்கு, பொதுமக்களுக்கான கட்டணம் ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும்.
மொத்த வாடிக்கையாளர்களுக்கு, 24 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.38 முதல் ரூ.100 வரையும், 48 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ.48 முதல் ரூ.72 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையால், ஆவணங்கள் மற்றும் பார்சல்களை தனித்தனியாக வகைப்படுத்தி, அதற்கேற்ற கட்டணத்தில் அனுப்பும் வசதி கிடைக்கும் என்றும், இதன் மூலம் சேவை மேலும் வெளிப்படையாகவும் எளிமையாகவும் இருக்கும் என்றும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
