அதன்படி, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று, வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராகவும், திலகபாமா பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் குழுவானது, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அக்கட்சியின் நிறுவனர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.
இதனையடுத்து, சமீபத்தில் தனது 88வது பிறந்தநாளையொட்டி ராமதாஸ் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாகவும், கட்சியின் முழுப் பொறுப்பையும் அன்புமணி ராமதாஸிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி (09.08.2025) மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸுக்குத் தனியாக நாற்காலி ஒன்று ஒதுக்கப்பட்டது. இருப்பினும் ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அந்த நாற்காலி காலியாவே இருந்தது.
இதனையடுத்து இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மேலும் ஓராண்டுக்குத் தொடர்வார். அதன்படி அடுத்த ஆண்டு (அதாவது 2026) ஆகஸ்ட் மாதம் வரை பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது. அதே போன்று கட்சியின் பொதுச் செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் ஓர் ஆண்டுக்கு அப்பதவியில் தொடர்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
