உலகக்கோப்பை துப்பாகிச்சுடுதல்
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 2026 உலகக்கோப்பை துப்பாகிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன் ஆகிய பிரிவுகளில் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
மொத்தம் 61 நாடுகள் கலந்துகொண்ட இந்த துப்பாக்கிச்சுடும் போட்டியில், 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் தொடங்கிய துப்பாக்கிச்சுடும் போட்டி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மனு பாக்கர் பதிவு
இந்நிலையில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட மனு பாக்கர், வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு கலவையான உணர்வுகள் உள்ளது. முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும், என்னால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.
மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது எனக்குக் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
எனது செயல்திறனை மேம்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால் அதே நேரத்தில், நான் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும்,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “கடின உழைப்பின் பலனைப் பார்ப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் முன்னேறுவதற்கு நிறைய இடமுள்ளது.
அதுவே என்னை ஊக்கத்துடன் வைத்திருக்கிறது. ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எனது குழுவினர், எனது குடும்பத்தினர் மற்றும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் அளித்த அசைக்க முடியாத அன்புக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றும் மனு பாக்கர் கூறியுள்ளார்.
இஷா சிங்
முன்னதாக மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இஷா சிங் தங்க பதக்கம் வென்றார்.
சீனாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈஷா 40 ஹிட்களுடன் ஆதிக்கம் செலுத்திய பொழுது, பாகர் 28 ஹிட்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் கலந்துகொண்ட ராஹி சர்னோபத், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் மற்றும் அபித்ன்யா அசோக் பாட்டீலும் சிறப்பான போட்டியை வெளிப்படுத்தினர்.
