தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன.
இடங்களை வீணடிக்காமல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (All India Quota) வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.
தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் 151 உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசும் அந்த இடங்களை வழங்க உள்ளது.

இதற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைக்கத் தவறியதால் தமிழக அரசு இந்த இடங்களை இழந்துவிட்டதாகவும் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.
தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன?
அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?

29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்னை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
