விசாகப்பட்டினம்: மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, விமான எரிபொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான டிக்கெட்டுகளின் விலை உயருமா? என்பது இன்னும் 10 தினங்களில் தெரிய வரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; எரிபொருள் விலை நிர்ணயம்: விமான எரிபொருள் விலையானது ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. எனவே, தற்போதைய சர்வதேசச் சூழலின் தாக்கத்தினால் விமான எரிபொருள் விலை உயருமா? என்பது ஏப்ரல் 1ம் தேதி தெரியவரும். அதேபோல, மேற்காசிய நாடுகளில் பாதுகாப்பான விமானச் சேவைகளை உறுதி செய்வதே எங்களின் முக்கியமான குறிக்கோள்.
எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரச் சுமை குறித்து அமைச்சகம் தொடர்ந்து விமான நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக விமான நிறுவனங்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றன. இது பல துறைகள் சார்ந்த விஷயம் என்பதால், மற்ற துறைகளுடன் ஆலோசித்துச் சிறந்த முடிவுகள் எடுக்கப்படும் எரிபொருள் விலை உயர்ந்தாலும், அதன் பாதிப்பு விமானச் சேவைகளையோ அல்லது பயணிகளையோ பாதிக்கக்கூடாது என்பதே அமைச்சகத்தின் நோக்கம், இவ்வாறு அவர் கூறினார்.
