தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டண உயர்வு?: பெற்றோர் சங்கத்தினர் ஓய்வுபெற்ற நீதிபதி விமலாவிடம் புகார்

புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை திருத்தி அமைப்பது தொடர்பான கல்விக் கட்டண நிர்ணயக் குழு கூட்டம், லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் மாநாட்டுக் கூடத்தில் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், கட்டணக் குழு சேர்மனுமான விமலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் சவுத்ரி முகமது யாசின், இயக்குநர் செவ்வேள், இணை இயக்குநர் மேரி ஜோஸ்பின் சித்ரா, சார்பு செயலர் சவுமியா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 2 பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கல்லூரிகளின் வரவு-செலவு கணக்கு விவரங்களை கட்டணக் குழு சேர்மனிடம் தாக்கல் செய்தனர். மேலும், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். கல்லூரிகளின் சார்பில் வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், கட்டணக் குழு சேர்மன் தனியார் கல்லூரிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்த பிறகே புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, கட்டணக் குழு சேர்மன் நீதிபதி விமலாவை மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தனியார் கல்லூரிகள் மீது பல்வேறு தீவிர புகார்களைக் கூறி மனு அளித்தனர்.

மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலா அளித்த அந்த மனுவில், தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுப்படி இளநிலை மருத்துவப் படிப்புக்கு நாலரை (4½) ஆண்டுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பயிற்சி மருத்துவர்களுக்குத் தனியார் கல்லூரிகள் சரியான ஊக்கத்தொகையை வழங்குவதில்லை என்றும், முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 40 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தனியார் கல்லூரிகளோ மாணவர்களின் வங்கி கணக்கில் ஊக்கத்தொகையைச் செலுத்தி விட்டு, பிறகு அதனை மீண்டும் பணமாகப் பிடுங்கிக் கொள்வதாகச் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

எனவே, உயர்கல்வி கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை விட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளைக் கண்காணிக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் தலைமைச் செயலர் தலைமையில் தனியாக ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, குழு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலில் ஈடுபடும் தனியார் கல்லூரிகள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Source link