தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஆடிப்பெருக்கும் முக்கியமானது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம்தேதி கொண்டாடப்படுகிறது. இதைக் கொண்டாட புதுமணத் தம்பதிகளும், மக்களும் தயாராகி வருகின்றனர். ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் மங்களகரமான இத் திருநாளில் நீர்நிலைகளை வழிபடுதல், புதிய தாலிக்கயிறு மாற்றுதல் மற்றும் படையல் இடுதல் ஆகியவை முக்கிய சடங்குகளாக பின்பற்றப்படுகின்றன.
காவிரி நதி போன்ற நதிக்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு சென்று தீபம் ஏற்றி, மலர்கள் மற்றும் மஞ்சள் குங்குமம் வைத்து நதியை வழிபாடு செய்கின்றனர். எலுமிச்சை, புளியஞ் சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங்கள், இனிப்புப் பொங்கல் மற்றும் பழங்கள் நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. இத்திருநாளில் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கொண்டாடும் விதமாக இயற்கைக்கும் நீருக்கும் நன்றி செலுத்தப்படுகிறது. இந்நாளில் விதை விதைத்தால் பயிர்கள் செழித்து வளர்ந்து பல மடங்கு பெருகும் என்பதும் நம்பிக்கையாகும்.
இந்நிலையில், ஆடிப்பெருக்கு பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தடையின்றி பயணம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய ஜூலை 31 முதல் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்தும், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
