ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய ராகுல்; லோக்சபாவில் சபாநாயகர் கண்டிப்பு

புதுடில்லி: பார்லியில் பேசுகையில், முட்டாள்கள் என்ற வார்த்தையை பயன்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எம்.பி.,க்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமித் ஷா குறித்து பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ எம்பிக்கள் வலியுறுத்தினர்.

மாணவர்கள் போராட்டம் குறித்து லோக்சபாவில் ராகுல் பேசியதாவது; நம் நாட்டில் கல்விக்காக மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இப்படியிருக்கையில், கல்விமுறையில் குளறுபடி, வினாத்தாள் கசிவு போன்றவற்றால் மாணவர்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது கோபத்தால் அல்ல, ஆதங்கத்தினால் தான். போராட்டங்களால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்கள் தங்களை கடவுள் போல நினைத்துக் கொள்கின்றனர். மற்றவர்களின் பேச்சுக்களை கேட்காதவர்கள் முட்டாள்கள். சில குருட்டுத்தனமான பக்தர்கள், முட்டாளைக் கடவுள் போல நம்புவார்கள், எனக் கூறினார்.

ராகுலின் இந்தப் பேச்சு பாஜவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தன்னுடைய பேச்சை நிறுத்திய ராகுல், ‘நான் யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு முட்டாள் எனக் கூறியிருந்தால் தான் அது விதிமீறல். நான் அப்படி பேசவில்லை,’ எனக் கூறினார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‘ராகுல் விதிகளுக்குட்பட்ட பேச வேண்டும். பார்லியில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை ராகுல் பயன்படுத்துகிறார். ஒரு மாணவர் கூறியதாகக் குறிப்பிட்டு அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதாக நினைக்கிறேன். ஆனால் உண்மையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது அவர்தான். அவர் அந்த வார்த்தையை பேசாமல் இருந்திருந்தால், யாருக்கு எந்த ஆட்சேபணையும் இருந்திருக்காது. அது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்,’ என்றார்.

இருதரப்பினரும் மாறி மாறி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். விவாதத்தில் கவனம் செலுத்தும்படி ராகுலுக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய ராகுல், மாணவர்கள் மீது பெல்லட் குண்டு துப்பாக்கிச்சூடு நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதியளித்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிரண் ரிஜிஜூ, ராகுல் ஆதாரமின்றி அமித் ஷா மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதாகவும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

அதேவேளையில், ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜூ சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Source link