உண்மைக்கு பின் ஓடுவது மாணவன்: பிம்பத்திற்கு பின் ஓடுவது முட்டாள்; ராகுல் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

நீட் மற்றும் போட்டித் தேர்வுத் தாள் கசிவுக்கு எதிரான சட்ட முன்வரைவு (Anti-Paper Leak Bill) மீதான விவாதத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்தையும் அமளியையும் ஏற்படுத்தியுள்ளன. மாணவிகளுடன் தாம் நடத்திய உரையாடலை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு, ஆளும் பா.ஜ.க எம்.பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்வுத் தாள் கசிவு குறித்த விவாதத்தில் பேசத் தொடங்கிய ராகுல் காந்தி, சமீபத்தில் சில பெண் மாணவிகளிடம் தான் உரையாடிய நிகழ்வை அவையில் பகிர்ந்துகொண்டார். ஒரு மாணவர் என்பது பள்ளியிலோ கல்லூரியிலோ படிப்பவர் மட்டுமல்ல; தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காமல், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள திறந்த மனதுடன் இருப்பவரே மாணவர். உண்மைக்கு பின்னால் ஓடுபவரே உண்மையான மாணவர் என்று அந்த மாணவி கூறியதாக ராகுல் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தனக்கு எல்லாமே தெரியும் என்றும், தானே கடவுள் என்றும் நினைக்கும் அகந்தை பிடித்த, மற்றவர்கள் சொல்வதைக் கேட்காத மற்றொரு பிரிவினரை ‘முட்டாள்கள்’ (Idiots) என்று அந்த மாணவி குறிப்பிட்டார். உண்மை இல்லாத அவர்கள், தங்களை மிகப் பெரிய உருவமாக (Image) காட்டிக்கொள்ள முயல்கிறார்கள் என்றார். அப்போது நான் அந்த மாணவியிடம் மூன்றாவது பிரிவு ஒன்று உள்ளதே அது யார் எனக் கேட்டேன். அதற்கு அவர் ‘அந்தபக்தர்கள்’ (Andhbhakt) என்று பதிலளித்தார் என ராகுல் காந்தி அவையில் பேசினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ராகுல் காந்தி ‘இடியட்’ (Idiot) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஒரு மாணவியின் உரையாடல் மூலமாக ராகுல் காந்தி அவைக்குப் புறம்பான ‘இடியட்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மாணவி கூறியதாகச் சொல்லி நாடாளுமன்ற வரம்பை மீறும் சொற்களை அவையில் பயன்படுத்த முடியாது என்று கிரண் ரிஜிஜு கூறினார். இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அவர்களுக்கு இந்த வார்த்தை பிடிக்கவில்லை என்றால், நான் ‘இடியட்’ என்ற வார்த்தை பயன்படுத்தாமல் வேறு ஒரு மாற்று வார்த்தையைப் (Proxy word) பயன்படுத்துகிறேன். ஆனால் என்னை பேச அனுமதியுங்கள் என்றார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குறுக்கிட்டு அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. நான் இந்த வார்த்தை எந்த ஒரு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் சுட்டிக்காட்டிப் பேசவில்லை. அதனால் இது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான சொல் அல்ல. அவையை ஒழுங்குமுறைப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பு. ஆனால் நான் பேசத் தொடங்கும் போதெல்லாம் ஆளுங்கட்சியினர் குறுக்கிடுகிறார்கள். மத்திய அமைச்சரையும் பேச அனுமதிக்கிறீர்கள். பாஜக மட்டுமே பேச வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பேசாமல் உட்கார்ந்துகொள்கிறேன் எனச் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அவையில் அமைதியை நிலவச் செய்ய முயன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, அவை ஒழுங்காகத்தான் இயங்குகிறது, உறுப்பினர்கள் பேசுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து இடையூறு செய்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அமைதி காத்து விவாதத்தைத் தொடர விடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, தேர்வுத் தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்களைப் பாராட்டிய ராகுல் காந்தி, மாணவர்களின் போராட்டம் என்பது கோபமோ வன்முறையோ அல்ல; அது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் கனவு மற்றும் நம்பிக்கை. பாஜக தலைவர்கள் தங்கள் சொந்த குழந்தைகளிடம் பேசினாலும் கூட இதே கவலையைத் தான் வெளிப்படுத்துவார்கள். அனைத்துக் கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

Source link