“சிங்கப் பெண் படை உருவாக்கப்பட்டும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – சி.வி.சண்முகம்

சென்னை: “மாற்றம் வேண்டுமென்று தான் மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், பெண்களை தரம் தாழ்ந்து பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை; சிங்கப் பெண் படை உருவாக்கப்பட்டும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக, அதிமுக இருவரும் மாறி மாறி ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் பெண்களை அவதூறாக சித்தரித்ததில்லை.

எனக்கும் இபிஎஸ்க்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம்; அது வேறு. என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள், ஆனால் அதிமுக பெண்களை தவறாக சித்தரித்து வருவதை நீங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இது உங்கள் தலைமைக்கு அழகா, இது தான் கட்சி நடத்தும் லட்சணமா? இந்த நிலையை ஜெயலலிதா இருந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். இவை அனைத்தையும் மக்களும், அதிமுக தொண்டர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்றத்துக்கு தான் மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், பெண்களை தரம் தாழ்ந்து பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தின் நிலை என்ன? சிங்கப் பெண் படை உருவாக்கப்பட்டும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண்கள் இனி பொது வாழ்க்கைக்கு வர முடியாது; அவர்கள் பயப்படுகிறார்கள். இன்னும் காவல்துறை மாறவில்லை.

என்னைப் பற்றி விமர்சித்திருக்கிறார்கள். ஆண்களைப் பற்றி பேசுவது எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் பெண்களை தரம் தாழ்ந்து பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் இனி கஞ்சா விற்பனை செய்கிறவர்கள், பெண்களை துன்புறுத்துபவர்கள் சுதந்திரமாக இருக்கலாம். அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு சிறப்பான கண்காணிப்பாளரை நியமித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இனி இப்படித் தான் சொல்ல முடியும். முதல்வர் காவல்துறைக்கு அறிவுரை கூறி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link