புதுடில்லி: டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவித்தது. பயங்கரவாதிகளுக்கு துணை போனதாக பாவெல் மீது குற்றம் சாட்டியுள்ளது.
டெலிகிராம் செயலி நிறுவனர் பாவெல் துரோவ் மீது பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்யா குற்றம் சாட்டி, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாக கூறி, டெலிகிராம் நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாவெல் துரோவ் ஏற்கனவே ரஷ்யாவை விட்டு வெளியேறி தற்போது பிரான்சில் இருக்கிறார். பாவெல் துரோவ் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சர்வதேச தேடப்படும் பட்டியல் மற்றும் குற்றவியல் விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் நாசவேலை மற்றும் பயங்கரவாதச் செயல்கள், படுகொலைகள், மற்றும் இணையவழி மோசடி ஆகியவற்றைத் திட்டமிடுவதற்கு உக்ரைன் உளவு அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகளால் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான சேனல்கள், உரையாடல்களை டெலிகிராம் நிர்வாகம் அகற்றவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யாவின் மிகவும் பிரபலமான செய்தியனுப்பும் செயலிகளில் ஒன்றான டெலிகிராமை ரஷ்யா கட்டுப்படுத்தி வரும் நிலையில், பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய அதிகாரிகள் தனக்கு எதிராக ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், டெலிகிராம் செயலியை கட்டுப்படுத்த அவர்கள் போலியான காரணங்களைக் கூறுவதாகவும் பாவெல் துரோவ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
