டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியிடம் விசாரணை!

டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள்  நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் ஒரு பகுதியாக, சென்னை, கரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, உதகமண்டலம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 41 இடங்களில் இன்று (29.07.2026) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம், லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள் காலை முதல் விசாரணை நடத்தினர். அதன்படி சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். விசாரணையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் ஒரு பெட்டியுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link