நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சுந்தரனார் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம் மூன்றாவதாக தமிழத்தாய் வாழ்த்து பாடப்படும் என்று கவர்னர் மாளிகையிலிருந்து வந்த கண்டிப்பான உத்தரவு என துணை வேந்தர் சந்திரசேகர் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் துணைவேந்தற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன். இதற்கான அழைப்பிதழை உங்களுக்கே திருப்பி அனுப்பி உள்ளேன் என்று கடையநல்லூர் ம.தி.மு.க எம்.எல்.ஏ ராஜேந்திரன் அழைப்பிதழோடு கடிதத்தையும் துணைவேந்தருக்கு அனுப்பி தன் எதிர்ப்பை பதிவு செய்தார். உயர் கல்வித் துறை அமைச்சரான விஷ்வநாதனும் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக தெரியவந்தது. அதோடு நெல்லை காங்கிரஸ் எம்பி ராபர்ட் ப்ரூஸ்சும் புறக்கணித்திருந்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33 வது பட்டமளிப்பு விழா காலை சரியாக 10:30 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பட்டம் பெறும் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு பலத்த சோதனைக்குப் பின்பே பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு துறைகளில் பி.எச்.டி பட்டம் பெற்ற 758 பேர்களுக்கு தானும் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் சிறப்பு விருந்தினரும் பட்டம் வழங்குவோம் என்று அறிவித்தார்.
துணைவேந்தரின் இந்த அறிவிப்பிற்கு பட்டம் பெற வந்த மாணவ மாணவிகள் இடையே கடும் எதிர்ப்பு கூச்சல் குழப்பம் கிளம்பியது. கஷ்டப்பட்டு படித்தும் அந்த பிஎச்டி பட்டம் உரியவர்தான் எங்களுக்கு தர வேண்டும் இல்லை என்றால் தேவையில்லை என்று கூறி பட்டத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் பெறமாட்டோம் அரங்கை விட்டு வெளியேறுவோம் என்றபோது பட்டம் பெற வந்தவர்களிடையே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. உடனே அரங்கம் பூட்டப்பட்டது. பின்னர் இது தொடர்பாக கவர்னர் மாளிகையுடன் பேசிவிட்டு அறிவிப்பதாக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார். அடுத்த சிறிது நேரத்தில் கவர்னரின் செயலாளர் சஜ்ஜன் சிங் சவான் அனைவருக்கும் கவர்னரே பட்டம் வழங்குவார் என அறிவித்தார். அதன் பிறகு போராட்டத்தை கைவிட்டு அமைதியாக இருந்தனர்.
பின்னர் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் தொடக்கமாக மாணவிகளால் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. பின்னர் இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடலாக இந்த உலகிற்கு தந்த மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்தில் அவரது பாடல் ஒதுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரங்கத்தில் கூடியிருந்தவர்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். போலீஸ் மேலாண்மை பாடத்தில் குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறை பிரிவில் பட்டம் பெறுவதாயிருந்த தமிழகம் சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் விழாவில் நேரடியாக பங்கேற்று பட்டம் பெறுவதையும் தவிர்த்து விட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/07/29/manonmaniam-convocation-sec-2026-07-29-15-21-30.jpg)
இதேபோல் மும்பை தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகசுதா மேலாண்மை கல்வியிலும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப் கோர்ட் சீனியர் சிவில் நீதிபதி திரிவேணி மனித உரிமை பாடத்திலும் நேரடியாக நேரடியாக முனைவர் பட்டம் பெறாமல் புறக்கணித்தார். பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட தகவல் பரவியதால் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தலாம் என்ற பதற்றம் காரணமாக டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் அதிரடி படை போலீசார், கலவரத்தை தடுக்கும் கமாண்டோ போலீசார் நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டனர். இது போன்ற ஆயுதப்படைகளின் பாதுகாப்போடு நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது பட்டமளிப்பு வரலாற்றிலே இதுவே முதல் முறையாகும்.
