புதுடில்லி: 'டிஜிட்டல் கைது மோசடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனத்தில், மீண்டும் புதிய 'வாட்ஸாப்'

புதுடில்லி: ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனத்தில், மீண்டும் புதிய ‘வாட்ஸாப்’ கணக்கு திறக்க முடியாத வகையில் முடக்க வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் டிஜிட்டல் கைது மோசடி குறித்து துறைகளுக்கு இடையேயான உயர்மட்ட குழுவை, கடந்த ஆண்டு டிசம்பரில் அமைத்தது. டில்லியில் இந்த குழுவின் மூன்றாவது கூட்டத்தில், ‘வாட்ஸாப்’ நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று விரிவான ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயனர் பாதுகாப்பை மேம்படுத்துவது, போலீசாரின் விசாரணைகளுக்கு உத வுவது உள்ளிட்ட பல உறுதிமொழிகளை, ‘வாட்ஸாப்’ தளம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் மோசடிகளில் பயன்படுத்தப்படும், ‘மொபைல் போன், லேப்டாப்’ உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முடக்கும் திட்டம் குறித்து, 45 நாட்களில் முன்மொழிவை சமர்ப்பிக்க, ‘வாட்ஸாப்’ நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு முடக்கினால், அதன் பின் அந்த சாதனத்தில் புதிய எண்ணில் இருந்து மீண்டும் ஒரு ‘வாட்ஸாப்’ கணக்கு துவங்க முடியாது. மேலும், ‘வாட் ஸாப்’பில் நீண்ட நேர மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு முறைகள் உருவாக்க வேண்டும். ‘ஸ்கைப்’ வீடியோ அழைப்பு செயலியில் உள்ளது போல், தெரியாத நபரிடம் இருந்து வரும் ‘வாட்ஸாப்’ அழைப்பு குறித்து பயனருக்கு எச்சரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலீஸ் அதிகாரி போல் நடித்து வீடியோ கால் செய்யப்பட்டால், அவற்றை கண்டறிந்து பயனருக்கு குறிப்பிட வேண்டும் போன்ற யோசனையும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link