பெரும்பாலான குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது அல்லது புது வீடு வாங்குவது என்பது பெரிய கனவாக இருக்கிறது. இது அவர்களின் வாழ்நாளின் மிகப்பெரிய, மிக முக்கியமான நிதி சார்ந்த முடிவாகும். பல ஆண்டுகளாக அவர்கள் கண்ட கனவை நனவாக்குவது பலருக்கு பெரும் சிரமமாகவே இருக்கிறது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நம்பிக்கை ஆகியவற்றை சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது அதைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கிறது.
ஆனால் இந்தக் கனவை நனவாக்கவும், இந்த முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கவும், வீடு வாங்கும் விருப்பம் மட்டும் போதாது. சரியான நேரத்தில் மற்றும் சரியான வழிகளில் கடன் வசதி கிடைப்பதும் மிக முக்கியம். அதனால்தான், இந்தியாவின் வீட்டுவசதித் துறையின் வளர்ச்சி என்பது உண்மையில் சாமானிய மக்களுக்குக் கடன் வசதி எளிதாகக் கிடைக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. தற்போது, இந்தியாவின் வீட்டுவசதி நிதியளிப்புத் துறைக்கு (Housing Finance Industry) வளர்ச்சிக்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
கேர்-எட்ஜ் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தற்போது ரூ. 33 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியாவின் வீட்டுக் கடன் சந்தையானது, வரும் சில ஆண்டுகளில் (2025 முதல் 2030 நிதியாண்டு வரை) ஆண்டுக்கு 15 முதல் 16 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்து, ரூ. 77 முதல் ரூ. 81 லட்சம் கோடி வரை உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய புள்ளிவிவரங்கள் ரியல் எஸ்டேட் சந்தையின் வலிமையை வெளிப்படுத்துகின்றன. அதேவேளையில், அவை ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகின்றன. கடன் சந்தையில் இந்த அடுத்தகட்ட வளர்ச்சி எதிலிருந்து வரப்போகிறது?
இந்த வளர்ச்சி என்பது பெரிய வங்கிகள், பெருநிறுவன வேலைவாய்ப்புகள் மற்றும் முறையான வங்கிச் சேவைகளுடன் ஏற்கனவே தொடர்புடைய ஒரு சில குறிப்பிட்ட அல்லது முக்கிய வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டும் வரப்போவதில்லை. மாறாக, வாடகை வீடுகளிலிருந்து வெளியேறி சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று கனவு காணும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தே வளர்ச்சியின் அடுத்த பெரிய அலை உருவாகப்போகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் சிறு தொழில்முனைவோர், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் போன்ற சாதாரண குடும்பத்தினரிடம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நோக்கமும் திறனும் உள்ளன. இருப்பினும், காலாவதியான நடைமுறைகள், கடுமையான விதிமுறைகள் மற்றும் சிக்கலான ஆவணப் பணிகள் காரணமாக அவர்களால் வங்கிகளிலிருந்து எளிதாகக் கடன் பெற முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.
எனவே, இத்துறையின் முன் இப்போதுள்ள மிகப்பெரிய சவால் புதிய தேவையை உருவாக்குவது மட்டும் இல்லை; வீடு வாங்க ஏற்கனவே தயாராக இருப்பவர்களுக்கான கடன் பெறும் வாய்ப்பை எளிதாக்குவதும், அவர்களிடம் மறைந்திருக்கும் அந்தத் தேவையைச் செயல்படுத்திக் கொள்வதுமே உண்மையான வாய்ப்பாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக வங்கிக் கடன் முடிவுகள் அனைத்தும் முறையான வேலைவாய்ப்பு ஆவணங்கள், வருமான வரித் தாக்கல் (ITR) விவரங்கள் மற்றும் நிலையான சம்பள விவரப்பட்டியல் (salary slip) ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த பாரம்பரிய அணுகுமுறை பலருக்குப் பயனுள்ளதாக இருந்தபோதிலும், இந்தியாவின் குறிப்பிடத்தக்க அளவிலான உழைக்கும் வர்க்கத்தினரை – அதாவது மாதந்தோறும் வருமானம் மாறுபடும் மற்றும் பாரம்பரிய மதிப்பீட்டு முறைக்குள் அடங்காத சிறு தொழில்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் போன்றோரை – இது புறக்கணித்தது.
இந்தச் சூழல் இப்போது முழுமையாக மாறி வருகிறது. வாடிக்கையாளரின் நிதி நிலைமை குறித்த தெளிவான மற்றும் துல்லியமான புரிதலைப் பெற, கடன் வழங்குநர்கள் இப்போது டிஜிட்டல் சரிபார்ப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஒரு வரையறுக்கப்பட்ட வகைக்குள் பொருந்துகிறாரா என்று கேட்பதற்குப் பதிலாக, இப்போது அவர்களின் நிதி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை மிகவும் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆப், போன் மூலமாக வீட்டுக் கடன் செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாகி வந்தாலும், வீட்டிற்கான நிதியுதவி குறித்த முடிவு இன்றும் பரஸ்பர நம்பிக்கையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. முதல் முறையாகக் கடன் பெறுபவர்களுக்கு ஏராளமான விதிமுறைகள், சந்தை வாய்ப்புகள், ஆவணத் தேவைகள் மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான கடமைகள் ஆகியவை குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர்.
வீட்டு வசதிக்கான நிதியுதவியின் எதிர்காலம் தொழில்நுட்பத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படாது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பமும் நம்பிக்கைக்குரிய மனித ஆலோசனைகளும் இணைந்து செயல்பட்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எளிதான மற்றும் பாதுகாப்பான முறையில் கடன் கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு வலுவான சூழலே எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று கூறுகின்றனர்.
சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்குக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும்போது, அதன் நேர்மறையான தாக்கம் ஒரு குடும்பத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன் நன்மைகள் வெகுதூரம் பரவுகின்றன. அவை ஒட்டுமொத்த சமூகங்களையும் மக்கள் குழுக்களையும் வலுப்படுத்துகின்றன. சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளும் பொருளாதார வாய்ப்புகளும் உருவாகின்றன. மக்களின் நீண்டகாலக் கனவுகள் நிதிப் பாதுகாப்பாக மாறுகின்றன.
ஏனெனில், இந்தியாவின் வீட்டு வசதித் துறையின் வளர்ச்சி என்பது நாடு முழுவதும் எத்தனை பெரிய கட்டிடங்கள், கான்கிரீட் கட்டமைப்புகள் அல்லது செங்கல் வீடுகளைக் கட்டியுள்ளனர் என்பதன் மூலம் மட்டும் அளவிடப்படாது. இறுதியில், எத்தனை சாதாரண, தேவை உள்ள மக்களைச் சொந்த வீடு உரிமையாளர்களாக மாற உதவியுள்ளனர் என்பதன் மூலமே அது தீர்மானிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
