இனி ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்: விராத் கோலி 'அட்வைஸ்'

பெங்களூரு: ”கோப்பையை மீண்டும் வெல்ல தயாராகுங்கள். ஒரு நிமிடத்தை கூட வீணாக்க கூடாது,” என சக வீரர்களுக்கு விராத் கோலி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரிமியர் கிரிக்கெட் லீக் வரலாற்றில், அணி மாறாத ஒரே வீரர் கோலி, 37. கடந்த 2008ல் இருந்து பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாடுகிறார். 2025ல் 8 அரைசதம் உட்பட 657 ரன் விளாசிய இவர், பெங்களூரு அணியின் 18 ஆண்டு கால கோப்பை கனவை நனவாக்கினார். 19வது சீசன், வரும் 28ல் துவங்குகிறது. சின்னசாமி மைதானத்தில் நடக்க உள்ள முதல் லீக் போட்டியில் (மார்ச் 28) ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. மீண்டும் கோப்பை வெல்லும் இலக்குடன் உள்ளார் கோலி. இதற்காக சின்னசாமி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியில் இம்முறை வெங்கடேஷ் ஐயர், மங்கேஷ் யாதவ், ஜோர்டன் காக்ஸ், விக்கி ஆஸ்ட்வால், சத்விக் தேஸ்வல் உள்ளிட்ட வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அணியின் பலம் அதிகரித்துள்ளது.

120 சதவீத உழைப்பு: கோலி கூறுகையில்,”இரண்டு அல்லது மூன்று சீசனில் கடினமாக உழைத்ததால் தான், 2025ல் கோப்பை வென்றோம். இம்முறை கடின சவால் காத்திருக்கிறது. மற்ற அணிகள் நம்மை குறி வைக்கும். வரும் நாட்கள் மிகவும் முக்கியம். நாம் எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டும். பயிற்சியின் போது ஒரு நிமிடத்தை கூட வீணாக்க கூடாது. அடுத்த இரு மாதங்களுக்கு அணியின் நலனுக்காக, 120 சதவீத உழைப்பை சக வீரர்கள் வெளிப்படுத்த வேண்டும்,”என்றார்.

பெங்களூரு அணி தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கூறுகையில்,”ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளோம். அனுபவ கோலி, கேப்டன் ரஜத் படிதார் மீண்டும் கைகொடுக்கலாம். கடந்த முறை கோப்பை வென்றதற்கு அடையாளமாக ‘ஜெர்சி’யில் ஒரு நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இது பெருமையான விஷயம். முதல் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடப்பது எங்களுக்கு சாதகம்,”என்றார்.

9,000 ரன் நோக்கி

சர்வதேச ‘டி-20’ அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, பிரிமியர் தொடரில் மட்டும் பங்கேற்கிறார். 2023ல் 639 ரன், 2024ல் 741 ரன், 2025ல் 657 ரன் என தொடர்ந்து அசத்துகிறார். இம்முறை 339 ரன் எடுத்தால், பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் 9,000 ரன் எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம். இத்தொடரில் அதிக சதம் (8), அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் கோலி (267 போட்டி, 8661 ரன், 63 அரைசதம், சராசரி 39.54, ஸ்டிரைக் ரேட் 132.85) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ரோகித் சர்மா (272 போட்டி, 7046 ரன், 2 சதம், 47 அரைசதம், சராசரி 29.73, ஸ்டிரைக் ரேட் 132.09) உள்ளார்.

ஆகாஷ் தீப் விலகல்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் 29, பிரிமியர் தொடரில் கொல்கட்டா அணியில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்தார். பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., சிறப்பு மையத்தில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எட்டு வாரம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பிரிமியர் தொடரில் இருந்து விலகினார். இவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் (ஜூன் 6-10, முல்லன்பூர்) விளையாடுவதும் சந்தேகம்.

ஏற்கனவே வங்கதேசத்தின் முஸ்தபிஜுர் விடுவிக்கப்பட்டார். இலங்கையின் பதிரானா, இந்தியாவின் ஹர்ஷித் ராணா காயத்தால் வெளியேறினர். தற்போது ஆகாஷ் தீப் விலகியதால் கொல்கட்டா அணியின் பந்துவீச்சு பலவீனமடைந்துள்ளது.

Source link