வீட்டில் இருந்தபடி, மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, பால் விற்பனையில் கணிசமான லாபம் ஈட்டும்,

வீட்டில் இருந்தபடி, மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, பால் விற்பனையில் கணிசமான லாபம் ஈட்டும், கன்னியாகுமரி மாவட்டம், கட்டிமாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த, 35 வயதான விவேக் மோகன்குமார்: என் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தார். மருத்துவர்களிடம், ‘ஏன் இந்த மாதிரி கொடிய நோய்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன’ என்று கேட்டதற்கு, ‘இதற்கு பல காரணங்கள் உண்டு; உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமும் இதற்கு முக் கிய காரணம்’ என்றனர் .

அம்மாவின் மரணம், என் மனதில் மிகுந்த வலியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், புதிய திசையில் என்னை சிந்திக்கவும் வைத்தது.

மக்கள் ஆரோக்கியமாக வாழ, நம்மால் முடிந்த சிறு பங்களிப்பையாவது செய்யணும் என்ற எண்ணம் தோன்றியது. பாரம்பரிய உணவு முறைகளை மீட்டெடுத்து, மக்களிடம் பரவலாக்கம் செய்வது தான், அம்மாவுக்கு செய்யும் காணிக்கை என்று நினைத்தேன்.

முதல்கட்ட முயற்சியாக, நாட்டு பசு மாடுகள் வளர்த்து, பால் விற்பனை செய்ய முடிவெடுத்து, சிறு மாட்டுப் பண்ணை அமைத்தேன்.

ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள், நாட்டு பசும்பால் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அந்த சமயத்தில், நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தைக்கு, போதுமான அளவுக்கு தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

அதற்கு மாற்றாக, நாட்டு பசும்பால் கொடுக்கச் சொல்லி மருத்துவர் பரிந்துரை செய்ததோடு, எங்கள் சிறு மாட்டுப் பண்ணை முகவரி கொடுத்து, அந்த குழந்தையின் தந்தையை அனுப்பி வைத்தார்.

அவர், பல கி.மீ., பயணம் செய்து, எங்கள் சிறு மாட்டுப் பண்ணைக்கு வந்து நாட்டு பசும்பால் வாங்கி சென்றார். இந்த விஷயம் ஊர் முழுக்க பரவி, ஆச்சரியமாக பேசப்பட்டது.

அதன்பின் நாட்டு பசும்பாலின் அருமையை உணர்ந்து, வெளியூர் மக்கள், எங்கள் சிறு மாட்டுப் பண்ணையை தேடி வந்து பசும்பால் வாங்கினர். சுற்றுவட்டார மக்களும் மிகவும் ஆர்வமாக என்னிடம் பால் வாங்க ஆரம்பித்தனர்.

இப்போது என்னிடம் எட்டு நாட்டு பசுக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக, 40 லிட்டர் பால் கிடைக்கிறது. 1 லிட்டர் 120 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன்.

தினமும் விற்பனை செய்வது போக மீதமிருக்கும் பாலை, பனீராகவும், நெய்யாகவும் மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறேன்.

ஆண்டுக்கு சராசரியாக, 13 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது; எல்லா செலவுகளும் போக, 6 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. கூடிய விரைவில் மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறேன்.

தொடர்புக்கு

98402 22637

 ரத்தம் தேவையா? எங்களை அணுகுங்கள்!

ரத்த
தானம் செய்து, பல உயிர்களை காப்பாற்றியிருக்கும், கரூர் மாவட்டம், காந்தி
கிராமத்தைச் சேர்ந்த, 53 வயதான தேன்மொழி – 61 வயதான ரத்தினம் தம்பதி:

தேன்மொழி: இதுவரை நான், 105 முறையும், என் கணவர், 108 முறையும் ரத்த தானம் செய்துள்ளோம். திருச்சி மாவட்டம், முசிறியில் பிறந்தேன்.

பி.காம்., படித்தேன். 2007ல் நீதிமன்றத்தில் வேலைக்கு சேர்ந்து, இப்போது மாவட்ட நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக இருக்கிறேன்.

கணவர், அரசு பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து, ஓய்வு பெற்று விட்டார்.
கல்லுாரியில் படிக்கும் போது கணவர் ரத்த தானம் செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு அவரை பார்த்து, எனக்கும் ரத்த தானம் செய்ய வேண்டும்
என்ற உத்வேகம் வந்தது.

கடந்த, 1999ல் ரத்த தானம் செய்ய
ஆரம்பித்தேன். பிரசவம், விபத்து, அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சைக்கு
எல்லாம் ரத்தம் கொடுத்துள்ளேன். நம் மூலமாக யாரோ காப்பாற்றப்படும் போது
மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

நான், 100வது முறையாக ரத்த தானம்
செய்தபோது, அப்போதைய மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம், எனக்கு சால்வை
அணிவித்து, ‘நீங்கள் செய்வது உயிர் காக்கும் உன்னத பணி; விடாமல் தொடர்ந்து
செய்யுங்கள்’ என்று பாராட்டி, சான்றிதழ் கொடுத்து ஊக்கப் படுத்தினார்.

அவசர தேவை வரும்போது அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் சார்பில், எங்கள்
வீட்டுக்கே வந்து ரத்தம் எடுத்து செல்வர். எங்களை பார்த்து, எங்கள் இரு
மகன்களும் ரத்த தானம் செய்தனர்.

ரத்தினம்: பி.இ., படித்திருந்த
என் பெரிய மகன் அருள், 2019ல் கார் விபத்தில் இறந்து விட்டார். ‘குடும்பமே
சேர்ந்து ரத்த தானம் செய்து, எத்தனை உயிர்களை காப்பாற்றியிருப்போம்.

ஆனால், எங்கள் மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே… நல்லது செய்யும் எங்களுக்கு ஏன் இந்த கொடுமை’ என்று கதறினோம்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நாங்கள் ரத்த தானமே செய்யவில்லை. அதன் பின்,
நாம் செய்யுற சேவையை ஏன் நிறுத்தணும்? நம்மால் பல உயிர்கள்
காப்பாற்றப்படட்டும் என்று மனதை தேற்றி, மறுபடி ரத்த தானம் செய்து
வருகிறோம்.

நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம்
செய்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் 300 மி.லி., எடுப்பர். மத்தவங்களுக்கு
பணம் கொடுத்து தான் உதவ முடியவில்லை; நமக்குள் ஓடும் ரத்தத்தை கொடுத்து உதவ
முடிகிறதே என்று நினைத்துக் கொள்வேன்.

என் இறுதிமூச்சு வரை இதை
செய்வேன். தமிழகத்தில் யாருக்கு, ‘ஓ பாசிட்டிவ்’ ரத்தம் தேவைப்பட்டாலும்
எங்களை கூப்பிடுங்கள்; தவறாமல் வந்து ரத்தம் கொடுப்போம்.

தொடர்புக்கு:

98946 48109.

Source link