நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில், மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சில முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதே தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருஞான சம்பந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பது குறித்த விவரத்தையும், அந்த அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு பகுதியில் வாங்கப்பட்ட சொத்து தொடர்பான தகவல்களையும் குறிப்பிடவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணையானது நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டும், அறக்கட்டளை சொத்துக்கள் தனிப்பட்ட சொத்துக்கள் ஆகாது. தனிப்பட்ட முறையில் இந்த சொத்துக்கள் அவருக்கு சம்பந்தம் இருக்கிறது என்றால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதனால் இது தொடர்பாக எந்தவித நோட்டீஸையும் பிறப்பிக்க முடியாது’ எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்த தன்னுடைய வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக திருஞான சம்பந்தம் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
