புதுடில்லி: ” நக்சல் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுதலை பெற்று விட்டது ” என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளதாவது: ஒரு காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த நக்சலைட் ஆதிக்கத்தில் இருந்து, 60 ஆண்டுகால வன்முறைக்கு பிறகு தேசம் விடுதலை பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு நக்சலைட் அமைப்பினரை கையாள்வதற்கான தேசியக் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை உறுதியாக செயல்படுத்தியதாலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளாலும் இது சாத்தியமானது.
தற்போது எந்த மாவட்டமும் நக்சலைட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. நக்சல் பாதிப்பில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 126 ல் இருந்து
2018 ஏப்ரலில் -90
2021 ஜூலை -70
2024 ஏப்ரல்-38
2025 டிசம்பர் -08 ஆகவும் குறைந்து
2026 மார்ச் மற்றும் ஏப்ரலில் பூஜ்ஜியம் ஆனது.
தற்போது 37 மாவட்டங்கள் ‘ Legacy & Thurst’ மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த மாவட்டங்கள் நக்சலைட் பிரிவினைவாதத்தால் பாதிக்கப்படவில்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அரசின் ஆதரவு இன்னும் குறிப்பிட்ட நிலை அடையும் வரை தேவைப்படுகிறது.
ஒரு மாவட்டமானது, ‘கவலைக்குரிய மாவட்டம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இடதுசாரி தீவிரவாதத்தின் வன்முறைச் செயல்பாடுகள் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, அவற்றின் அமைப்புசார் கட்டமைப்பு முழுவதுமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் நக்சலைட் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளது. இங்கு நக்சலைட்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து வழிகளையும் தடுக்கும் வகையில்பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் இன்னும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அந்த பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
