தமிழகத்துக்கு வரும் ராகுலால் 'காவிரியை காப்போம்' என சொல்ல முடியுமா; அன்புமணி கேள்வி

சென்னை: “தமிழகத்துக்கு வரும் ராகுலால், ‘காவிரியை காப்போம்’ என சொல்ல முடியுமா,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ம.க.,வில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிந்ததை தொடர்ந்து, அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அறிவித்தார். இந்நிலையில், பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம், அன்புமணி தலைமையில், மாமல்லபுரத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், பா.ம.க., தலைவராக அன்புமணி, மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலராக வடிவேல் ராவணன்; பொருளாளராக திலகபாமா ஆகியோரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு உட்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், அன்புமணி பேசியதாவது:

வரும் 2031 தேர்தலில் பா.ம.க., வெற்றி பெற்று, தமிழகத்தை ஆட்சி செய்வதற்கான வியூகங்களை அமைப்போம். மேகதாது அணை குறித்து, நான் எழுப்பிய கேள்விக்கு பிறகே, மத்திய அரசின் நிலைப்பாடு வெளியே வந்துள்ளது. கர்நாடகாவில் வரும் 2028ல் சட்டசபை தேர்தல் நடப்பதால், காங்கிரசும், பா.ஜ.வும், கூட்டு சதி செய்கின்றன.

இதை சொன்னால், தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேசப்படுகிறார். நாங்கள் தனித்து நின்று, வெற்றி பெற்றுள்ளோம். உங்களால், ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது. வரும் 1ம் தேதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தமிழகம் வருகிறார். அவரால், ‘காவிரியை காப்போம்’ என சொல்ல முடியுமா;

மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து விட்டன. ஆனால், நமக்குள் பிரச்னை உள்ளது. முதல்வர் விஜய், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகா அரசுடன், பேச்சு நடத்தக்கூடாது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தி, சவுமியா தலைமையில் வரும் அக்.2 முதல், மது ஒழிப்பு இயக்கம் தொடங்கப்படும். சில மாதங்களில் ஆந்திராவிலும் பா.ம.க., தொடங்கப்படும். வரும் சனிக்கிழமை, ஆந்திராவை சேர்ந்த முக்கிய நபர்கள் வருகின்றனர். அவர்களுடன், அதற்கான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., மீது அதிருப்தி

பொதுக்குழுவில் பேசிய பா.ம.க., வழக்கறிஞர் பாலு, ”கடந்த12 ஆண்டுகளாக, தேசிய ஜனநாயக கூட்டணியில், பயணித்து வருகிறோம். கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜ., அன்புமணிக்கு உரிய அங்கீகாரத்தையும் பொறுப்பையும் வழங்கவில்லை. இப்போது நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்,” என்றார்.
அப்போது, குறுக்கிட்ட அன்புமணி, ”நமக்கு எந்த பொறுப்பும் வேண்டாம். நம் பணி தமிழகத்தில் தான் இருக்கும்,” என்றார். பொதுக்குழுவில், மாவட்ட தலைவர் கணேச மூர்த்தி பேசும்போது, ”பா.ம.க.வுக்கு மீண்டும் இரட்டை தலைமை கிடைத்துள்ளது,” என்றார். அப்போது, மேடையிலிருந்த சவுமியா, ‘ஐயோ’ என்பது போல் சைகை காண்பித்து சிரித்தார்.

Source link