‘எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு’ பங்கு வெளியீட்டுக்கு வருகிறது
‘எஸ் .பி.ஐ., மியூச்சுவல் பண்டு’ நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு, டி.ஆர்.ஹெச்.பி., ஆவணத்தை, ‘செபி’யிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வின் வாயிலாக மொத்தம் 20.37 கோடி ஈக்விட்டி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில், புதிய பங்குகள் ஏதும் வெளியிடப்படாது. தற்போதுள்ள முதலீட்டாளர்களான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் ‘அமுண்டி’ ஆகிய நிறுவனங்கள் தங்களது கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்கின்றன. வரும் 2026 செப்டம்பர் மாதத்துக்குள் பங்குகளை சந்தையில் பட்டியலிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எஸ்.பி.ஐ., கார்டு ஐ.பி.ஓ.,விற்கு பின், எஸ்.பி.ஐ., குழுமத்திலிருந்து வரும் மற்றொரு பெரிய ஐ.பி.ஓ., இதுவாகும்.
‘அமீர் சந்த்’ பங்கு விலை ரூ.201 – 212
பா சுமதி அரிசியை ஏற்றுமதி செய்யும், ‘அமீர் சந்த்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 440 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 201 முதல் 212 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வில் பங்குகளை வாங்குவதற்கு மார்ச் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திரட்டப்படும் நிதியை நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனம் மற்றும் பொதுவான தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகள் வரும் ஏப்ரல் 2ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘டாரன்ட் காஸ்’ நிறுவனம் வரைவு அறிக்கை தாக்கல்
கு ஜராத்தை சேர்ந்த ‘டாரன்ட்’ குழுமம், தனது ‘டாரன்ட் காஸ்’ நிறுவனத்தை பட்டியலிட தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக ‘ரகசிய டி.ஆர்.ஹெச்.பி.,’ ஆவணத்தை இந்நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்துள்ளது. இதில், புதிய பங்குகள் ஏதும் கிடையாது. ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் மட்டுமே தங்களது பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர். செபியிடம் பொதுவாக ஐ.பி.ஓ.,விற்கு விண்ணப்பிக்கும்போது அனைத்து நிதி விபரங்களும் பகிரங்கமாக தெரியவரும். ஆனால், ‘ரகசிய தாக்கல்’ முறையில் நிறுவனத்தின் முக்கிய தகவல்கள் மற்றும் நிதி நிலவரங்கள் போட்டியாளர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும். ஐ.பி.ஓ., தேதிகள் உறுதியான பிறகே இந்த விபரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
‘சி.எம்.பி.டி.ஐ.எல்.,முதல் நாளில் மந்தம்
‘கோல் இந்தியா’வின் துணை நிறுவனமான, ‘சி.எம்.பி.டி.ஐ.எல்.,’ நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீடு மார்ச் 20ல் ஆரம்பமானது. ‘என்.எஸ்.இ.,’ தரவுகளின்படி, முதல் நாளில் இந்த ஐ.பி.ஓ.,வுக்கு 7 சதவீதம் மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, மொத்தம் 7.97 கோடி பங்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், முதல் நாள் வெளியீட்டில் 52.44 லட்சம் பங்குகள் வேண்டி மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 10 சதவீதமும், பெரிய முதலீட்டாளர்கள் பிரிவில் 5 சதவீதம் விண்ணப்பங்களும் வந்துள்ளன. ஐ.பி.ஓ., துவங்குவதற்கு முன்பே, 22 முன்னணி ‘ஆங்கர்’ முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 469.74 கோடி ரூபாயை இந்நிறுவனம் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை வரம்பு: ஒரு பங்கிற்கு ரூ.163 -172.திரட்டப்படும் தொகை: ரூ.1,842 கோடி
ஐ.பி.ஓ., முடியும் தேதி: மார்ச் 24
