தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை ரோஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தனக்கு குழந்தையே பிறக்காது என்று டாக்டர் சொன்னதாகவும், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து டாக்டர் அவ்வளவு சந்தோஷப்பட்டார் என்றும் ரோஜா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரோஜா. கடந்த 1992-ம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளியான ’செம்பருத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினிகாந்த், அர்ஜூன், பிரபு. கார்த்திக் சரத்குமார், பிரபுதேவா. சத்யராஜ், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில், சிரஞ்சீவி மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ரோஜா வெள்ளித்திரையில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். அதிலும் நீங்களும் ஆகலாம் மகாலட்சுமி, லக்காக கிக்கா போன்ற நிகழ்ச்சி எல்லாம் பெரிய அளவில் பெயர் வாங்கியது.
நடிகை ரோஜா தனது முதல் பட இயக்குநரான ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அன்சுமாலிகா என்ற மகளும், கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளனர். தற்போது நடிகை ரோஜா, ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை ரோஜா, தனது திருமண வாழ்க்கை, திருமணத்திற்கு முன்பு தனக்கு நடந்த அறுவை சிகிச்கை அதன்பிறகு தான் கர்ப்பம் ஆனது குறித்து ட்ரூலி ராம் யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், எனக்கு குழந்தையே பிறக்காது என்று சொன்னார்கள். எனக்கு 2000-ம் ஆண்டு ஒரு பிரச்னை வந்தது. அப்போது கல்யாணம் ஆகவில்லை என்பதால் ஹோல்ஸ் போட்டு லேபோஸ்கோப் செய்தார்கள். அப்போது யூட்ரஸ் வால்வு டேமேஜ் ஆகி இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால் கர்ப்பம் ஆவது ரொம்ப கஷ்டம், வாய்ப்பு ரொம்ப குறைவு என்று டாக்டர்கள் சொன்னார்கள். 2000-ம் ஆண்டு இப்படி சொன்னார்கள். 2002-ம் ஆண்டு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். 2003-ம் ஆண்டு நான் கர்ப்பம் ஆகிவிட்டேன்.
நான் கர்ப்பம் ஆனது குறித்து டாக்டரிடம் சொன்னபோது அவர் என்னை விட ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் கர்ப்பம் ஆனால் இவர் எதற்கு இவ்வளவு சந்தோஷப்படுகிறார் என்று எனக்கு புரியவில்லை. உனக்கு குழந்தை பிறக்காது என்று நினைத்தேன். குழந்தைகள் உனக்கு பிடிக்கும். ஆனால் கடவுள் ஏன் இப்படி பண்ணுகிறார் என்று நினைத்தேன். ஆனால் நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொன்னார் என்று ரோஜா கூறியுள்ளார்.
