தமிழகத்திற்குத் தண்ணீர் தர எதிர்ப்பு; விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்துவிட ’காவிரி ஒழுங்குமுறை ஆணையம்’ உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தங்களுக்கு போதிய அளவிலான நீர் இல்லை. அதனால், தமிழகத்திற்குத் தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது.  

இந்நிலையில், காவிரி ஒழுங்குமுறை ஆணையம், 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி நீர், அதாவது 4 டி எம் சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து, கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

அதன்படி, மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும், அங்குள்ள நீர்ப் பாசன அலுவலகத்திற்குப் பூட்டுப்போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே  நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அதே போல, மைசூர் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பல்வேறு கன்னட அமைப்புகள் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்தால், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.  

காவிரி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்கக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையொட்டி, தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்குச் சென்று ஆகஸ்ட் 3 அன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, விவசாயிகளின் போராட்டம் அம்மாநிலத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  

Source link