கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3-1 என, கேரளாவை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. கேரளாவின் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ், பஞ்சாப் எப்.சி., அணிகள் மோதின. சமீர் ஜெல்கோவிச் (7வது நிமிடம்), பேடே அமராச்சி ஓசுஜி (18வது), டேனி ராமிரெஸ் (38வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, முதல் பாதி முடிவில் பஞ்சாப் அணி 3-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 65வது நிமிடத்தில் கேரளா அணிக்கு பல்லுா என்டியாய் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். தொடர்ந்து போராடிய கேரளா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி, இதுவரை விளையாடிய 5 போட்டியில், 2 வெற்றி, 2 ‘டிரா’, ஒரு தோல்வி என, 8 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது. கேரளா அணி 6 போட்டியில், ஒரு ‘டிரா’, 5 தோல்வி என 1 புள்ளியுடன் 13வது இடத்தில் நீடிக்கிறது.
சென்னை-கோவா மோதல்
சென்னையில் நடக்கவுள்ள ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் (மார்ச் 22) சென்னை, கோவா அணிகள் மோதுகின்றன. இது, இம்முறை சென்னை அணி சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி. இதுவரை விளையாடிய 4 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு ‘டிரா’, 2 தோல்வி என, 4 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது சென்னை.
